கர்நாடக சட்டமன்ற தேர்தல்: அதிமுக வேட்பாளர் வாபஸ்: அமித்ஷா மிரட்டலுக்கு எடப்பாடி பணிந்தார், ஓ.பன்னீர்செல்வமும் திரும்பப்பெற்றார்

சென்னை: கர்நாடக சட்டமன்ற தேர்தலில், புலிகேசிநகர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த அதிமுக வேட்பாளர் நேற்று தனது மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டார். வேட்பாளரை வாபஸ் பெற்றால்தான் டெல்லியில் சந்திப்பு என்று அமித்ஷா கூறியதால்தான் எடப்பாடி பணிந்து விட்டார் என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில், ஓ.பன்னீர்செல்வமும் தனது வேட்பாளரை திரும்ப பெற்றுள்ளார். கர்நாடகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு மே 10ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற நேற்று கடைசி நாளாகும். அதிமுக எடப்பாடி அணி சார்பில், புலிக்கேசிநகர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த அன்பரசன் தனது வேட்புமனுவை நேற்று திடீரென வாபஸ் பெற்றுக் கொண்டார்.

இதுகுறித்து சென்னையில் உள்ள அதிமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேற்று (திங்கள்) பாஜ மேலிட பொறுப்பாளர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, கர்நாடக மாநிலத்தில் 10.5.2023 அன்று நடைபெற உள்ள சட்டமன்ற பேரவை பொதுத்தேர்தலில், புலிகேசிநகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ள அதிமுக வேட்பாளர் டி.அன்பரசனை திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொண்டனர். இதற்கு இணங்க, கட்சி தலைமை பரிசீலனை செய்து, பாஜவின் கோரிக்கையை ஏற்று, அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளரான டி.அன்பரசன் தனது வேட்பு மனுவை திரும்பப் பெற்றுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக எடப்பாடி பழனிசாமி நாளை (26ம் தேதி) டெல்லி செல்கிறார். டெல்லியில் பாஜ தலைவர்கள் அமித்ஷா மற்றும் ஜே.பி.நட்டா உள்ளிட்டோரை சந்திக்க எடப்பாடி திட்டமிட்டுள்ளார். இந்த சந்திப்பின்போது, 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக – பாஜ கூட்டணி குறித்து உறுதி செய்ய திட்டமிட்டுள்ளார். இந்த நேரத்தில், கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜவுக்கு எதிராக அதிமுக வேட்பாளரை நிறுத்தினால், கூட்டணியில் பிரச்னை வரும் என்று பாஜ கட்சி மேலிட தேர்தல் பொறுப்பாளர்களும், அமித்ஷாவும் எடப்பாடியை எச்சரித்ததாகவும், உடனடியாக வேட்பாளரை வாபஸ் பெற்றால் மட்டுமே டெல்லியில் பாஜ தலைவர்களை சந்திக்க முடியும் என்று கூறப்பட்டதாகவும் தெரிகிறது.

இதன் காரணமாகவே எடப்பாடி பழனிசாமி நேற்று திடீரென கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளரை உடனடியாக வாபஸ் பெறும்படி கேட்டுக் கொண்டதாக அதிமுக தலைவர்கள் தெரிவித்தனர். அதேநேரத்தில் காந்திநகர் தொகுதியில் போட்டியிட மனு செய்த ஓ.பன்னீர்செல்வத்தின் வேட்பாளரும் வாபஸ் பெற்றுக் கொண்டார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

நீட் தேர்வை ரத்து செய்ய எடப்பாடி வலியுறுத்தல்

நீட் தேர்வு முடிவுகளில் முறைகேடு தேசிய தேர்வு முகமை பதிலளிக்க வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட்டிருந்தால் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்திருக்கும்: துரை வைகோ எம்.பி., பேட்டி