கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 24 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 24 பேர் அமைச்சர்களாக பதவியேற்று வருகின்றனர். புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார். கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்தது. இதையடுத்து. கர்நாடக முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டிகே சிவக்குமாரும் கடந்த 20-ம் தேதி பதவியேற்றுக்கொண்டனர்.

அப்போது 8 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர். ஆனால், அவர்களுக்கு எந்தத்துறையும் ஒதுக்கப்படவில்லை. இந்த நிலையில் , மீதமுள்ள அமைச்சரவையில் இடம்பெற காங்கிரஸ் எம்எல்ஏக்களிடையே போட்டி ஏற்பட்டது. ஒட்டு மொத்த எம்எல்ஏக்களில் 15 சதவீதம் பேருக்கு பதவி வழங்கலாம் என்ற விதியின்படி ஏற்கெனவே பத்து பேர் பதவியேற்றதால், 24 பேரை அமைச்சர்களாக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தினேஷ் குண்டுராவ், எஸ்.எஸ்.மல்லிகார்ஜூன் உள்ளிட்ட 24 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

டி.சுதாகர், நாகேந்திரா, சுரேஷா பி.எஸ்., உள்ளிட்டோருக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. என்.எஸ். போஸ்ராஜூ, ரஹீம் கான், எச்.கே.படீல், கே.வெங்கடேஷ் உள்ளிட்டோரும் அமைச்சராக பதவியேற்று வருகின்றனர். 24 அமைச்சர்களில் லட்சுமி ஹெப்பால்கர் என்ற பெண் ஒருவரும் பதவியேற்கிறார். அமைச்சர்கள் பதவி ஏற்புக்கு பிறகு அவர்களுக்கான துறைகள் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. ஏற்கனவே 8 அமைச்சர்கள் பதவி ஏற்றுள்ள நிலையில் தற்போது 24 அமைச்சர்கள் பதவியேற்று வருகின்றனர்.

Related posts

புதுக்கோட்டை அருகே மின்னல் தாக்கி இளைஞர் பலி..!!

கொடைக்கானலுக்குச் செல்ல உள்ளூர் மக்களும் ஒரு முறை இ-பாஸ் எடுப்பது கட்டாயம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

‘ஏழைகளுக்கான திட்டங்களால் மோடிக்கு வயிற்றெரிச்சல்’: கே.பாலகிருஷ்ணன் கண்டனம்