சுரங்க விபத்தில் சிக்கியவர்களை மீட்க இன்னும் 5 நாள் ஆகும்: அதிகாரிகள் தகவலால் உறவினர்கள் வேதனை

உத்தரகாசி: உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியவர்களை மீட்க இன்னும் 4 5 நாட்கள் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதால். அவர்களின் உறவினர்கள் வேதனை அடைந்துள்ளனர். சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒருபகுதியாக உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி பகுதியில் 4.5 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்படும் சுரங்கப்பாதையின் ஒருபகுதியில் மண் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர்.

கடந்த வௌ்ளிக்கிழமை சுரங்கத்துக்குள் 60 மீட்டர் நீளத்துக்கு கொட்டிய இடிபாடுகளில் 24 மீட்டர் தூரத்துக்கு இடிபாடுகள் அகற்றப்பட்டன. அப்போது திடீரென்று சுரங்கத்தினுள் விரிசலுடன் பயங்கர சத்தம் கேட்டது. தொடர்ந்து துளையிட்டால் சுரங்கம் மேலும் இடிந்து விழும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் கூறியதால் மீட்பு பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மீட்பு பணிகள் குறித்து அதிகாரிகள் கூறும்போது, “41 பேரை மீட்க ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட உத்திகள் பயன் தராத நிலையில், சுரங்கத்தின் மேற்பகுதியில் இருந்து செங்குத்தாக துளையிட்டு மீட்பது, சில்க்யாரா – பார்கோட் ஆகிய இருமுனைகளிலும் ஒரு முனையில் இருந்து மறுமுனை வரை துளையிட்டு மீட்பது என்பது உள்ளிட்ட வெவ்வேறு வழிகளை பின்பற்ற உள்ளோம். 41 பேரையும் மீட்க இன்னும் 4 5 நாட்கள் வரை ஆகலாம்” என்றனர்.

கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை 12ம் தேதி தீபாவளியன்று அதிகாலை 4 மணியளவில் விபத்து நேரிட்டது. ஒரு வாரத்துக்கும் மேலாக மீட்பு பணிகள் தொடர்கிறது.மீட்புப்பணி நிறைவடைய 5 நாட்கள் ஆகும் என்ற அறிவிப்பு தொழிலாளர்களின் உறவினர்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

* மீட்பு பணி சவாலாக உள்ளது – நிதின் கட்கரி

இதனிடையே ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, முதல்வர் புஷ்கர் சிங் தாமியுடன் விபத்து நடந்த இடத்தை நேற்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கட்கரி, “மீட்பு பணிகள் மிகவும் சவாலாக உள்ளது. 41 பேரையும் பாதுகாப்பாக மீட்க அனைத்து முயற்சிகளும் செய்யப்படுகின்றன. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரின் மனஉறுதியை அதிகரிக்க செய்ய வேண்டும். அனைவரையும் விரைவில் காப்பாற்றவே முன்னுரிமை தரப்படுகிறது” என்றார்.

* 41 பேருக்கு மருந்துகள்

சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களுக்கும் ஏற்கனவே பேருக்கும் தேவையான உணவு, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகள் ஏற்கனவே செய்து தரப்பட்டுள்ளன. இந்நிலையில், அவர்களுக்கு மல்டி வைட்டமின் மாத்திரைகள், மனசோர்வு அடையாமல் இருக்க மருந்துகள், திராட்சை, பேரீட்சை உள்ளிட்ட உலர் பழங்கள் தரப்படுவதாக சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை செயலாளர் அனுராக் ஜெயின் கூறியுள்ளார்.

Related posts

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த கடலூர் சின்னத்துரை குடும்பத்தினருக்கு 5 லட்சம் நிவாரண தொகையை அமைச்சர் வழங்கினார்

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் சென்னையிலிருந்து திருப்பதிக்கு தினசரி 400 பேர் வரை செல்ல ஏற்பாடு

பெரம்பலூர் அருகே திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை!