மண்ணுக்குள் புதைந்து கிடக்கும் மக்கள் வரிப்பணம்’குடிமகன்களின் கூடாரம், கழிவுநீர் குளமானது சுரங்க பாதை

  • திண்டுக்கல் பகுதி மக்கள் தவிப்பு
  • பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை

திண்டுக்கல்: திண்டுக்கல்- திருச்சி சாலையை இணைக்கும் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் உள்ள சுரங்க பாதை குடிமகன்களின் கூடாரமாக மாறி உள்ளது. மேலும் மழைநீர், கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுத்துகிறது.திண்டுக்கல் நகரில் இருந்து திருச்சி சாலையை இணைக்க ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலம் வழியாக ஏராளமான கனரக வாகனங்கள் செல்கின்றன. இதனால் பொதுமக்கள் நடந்து செல்வதற்காக பாலத்தின் கீழ் பகுதியில் சுரங்க நடைபாதை அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை இந்த சுரங்க பாதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராத நிலையில் உள்ளது. தற்போது இந்த சுரங்க பாதை பகுதி குடிமகன்களின் கூடாரமாக மாறி உள்ளது.

பகல், இரவு என 24 மணிநேரமும் திறந்தவெளி பாராக செயல்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள், அவ்வழியே நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். மேலும் சிறியளவில் மழை பெய்தாலும் மழைநீருடன், கழிவுநீரும் தேங்கி சுரங்க பாதை நிரம்பி சாக்கடை குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் ெகாசுக்கள் பல்கி பெருகி பல்வேறு நோய்களை பரப்பி வருவதாக இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘இப்பகுதியில் ரயில் தண்டவாளங்களை கடக்கும் போது ஏற்படும் விபத்துகளை குறைப்பதற்காக சுரங்க நடைபாதை கட்டப்பட்டது. ஆனால் இங்கு உருவாக்கப்பட்ட இந்த சுரங்க பாதை பயன்பாட்டிற்கு வந்து விட்டதா, வரவில்லையா என்பதே இதுவரை மக்களுக்கு தெரியாத அளவிற்கு தற்போது காட்சியளிக்கிறது. மேலும் சுரங்க பாதையில் மழைநீர், கழிவுநீர் தேங்கி நிற்கிறது.

இதில் கொசுக்களும் பெருகி நோய்களை பரப்பி வருகின்றன. இதுபோக குடிமகன்கள் சுரங்க பாதையில் கும்மாளம் போடுகின்றனர். இதனால் அவ்வழியே செல்லவே அச்சப்படும் நிலை உள்ளது. இதனை தவிர்க்கும் விதமாக பொதுமக்கள் வழக்கம் போல் ஆபத்தான முறையில் ரயில்வே தண்டவாளங்களை கடந்து செல்கின்றனர். மக்கள் வரிப்பணம் மக்களுக்கு பயன்படாமல் மண்ணுக்குள் புதைந்து கிடக்கிறது. எனவே ரயில்வே நிர்வாகம் சுரங்க நடைபாதையை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அறிவிக்கப்படாத பாராக செயல்படும் இந்த இடத்தில் போலீசார் கண்காணித்து, அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related posts

விதிகளுக்கு மாறாக நியமனம் செய்ததாக குற்றச்சாட்டு!: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் அதிரடி நீக்கம்..!!

வாகனங்களில் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்.. சென்னையில் இன்று முதல் அபராதம்: எவ்வளவு தெரியுமா?

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான கவிதா ஜாமீன் கோரிய மனு மீது மே 6ம் தேதி உத்தரவு