தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ள தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை கண்டுபிடிக்கும் பணி தீவிரம்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் பேட்டி

சென்னை: ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி உள்ள 5 பேரை தொடர்பு கொள்ளமுடியவில்லை என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் நிருபர்களிடம் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் நேற்று கூறியதாவது: ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களில் 70 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் எவரும் இல்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான குழு தெரிவித்துள்ளது.

ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்த தமிழ்ப் பெயர் கொண்டவர்களையும், தமிழ்நாட்டில் இருப்பிட முகவரி அளித்துள்ள 127 நபர்களது பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 119 நபர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தெரியவந்துள்ளது. எஞ்சிய 5 நபர்களது செல்பேசி மற்றும் முகவரி இல்லாத நிலையில் அவர்களை தொடர்புகொள்ள இயலவில்லை. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கட்டுப்பாட்டு அறையும் இணைந்து, தொடர்பு கொள்ள இயலாத நபர்களுடைய விபரங்களை சேகரிக்கும் பணியினை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

* 3 பேரின் நிலை தெரிந்தது 5 பேர் கதி என்ன?
விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலில் 30 தமிழர்கள் முன்பதிவு செய்திருந்த நிலையில் 8 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை என ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த 8 பேரில் கோவையை சேர்ந்த நாரகணிகோபி, சென்னையை சேர்ந்த ஜெகதீசன் ஆகிய 2 பேரும் பத்திரமாக வீடு திரும்பியுள்ளது தெரியவந்தது. கமல் என்பவர் ரயிலில் பயணம் செய்யவில்லை. இதனால் தொடர்பு கொள்ள முடியாத தமிழர்களின் எண்ணிக்கை 5 ஆக குறைந்துள்ளது. மீதமுள்ள அருண், கல்பனா, கார்த்திக், ரகுநாத், மீனா ஆகிய 5 பேரின் நிலை குறித்து தீவிரமாக விசாரிக்கும் பணி நடைப்பெற்று வருகிறது.

Related posts

மே-01: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!

சத்தியமங்கலம் அருகே விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

மும்பை இந்தியன்சை வீழ்த்தியது லக்னோ