சென்னையில் அடுத்த 2 ஆண்டுகளில் நுண்ணறிவு போக்குவரத்து திட்டம்

சென்னை: சென்னை மாநகராட்சி, சென்னை போக்குவரத்து காவல் மற்றும் எம்டிசி உள்ளிட்ட பல்வேறு துறையின் ஆதரவுடன் நுண்ணறிவு போக்குவரத்து அமைப்புகளை நிறுவுவதற்கான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. லார்சன் அண்டு டூப்ரோ லிமிடெட் JICA மற்றும் தமிழக அரசின் நிதியுதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து துறை சார்ந்த அதிகாரி கூறியதாவது: நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு திட்டம் 2 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டவுடன், சென்னை சாலைகளில் வாகனங்கள் விரைவாக செல்ல வசதியாக 165 சந்திப்புகளில் தானியங்கி சிக்னல் உள்பட பல்வேறு வசதிகள் அமைக்கப்படும். தானியங்கி சிக்னல் செயல்படுத்தப்பட்ட பிறகு, குறிப்பிட்ட வாகனங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் போக்குவரத்து விளக்குகள் இயக்கப்படும்.

வேக வரம்பை மீறும் வாகனங்களும் கணினி மூலம் கண்டறியப்படும். 50 சந்திப்புகளில் சிவப்பு விளக்கு மீறல் கண்டறியும் கருவி நிறுவப்படும். 58 இடங்களில் போக்குவரத்து விபத்து கண்டறிதல் கருவி நிறுவப்படும். இத்திட்டத்தின் மூலம் 3,500 பேருந்துகளில் ஜிபிஎஸ் பொருத்தப்படும். முதற்கட்ட திட்டத்தில் 160 இடங்களில் உள்ள பேருந்து நிலையங்களில் பேருந்து தகவல் அமைப்பு இருக்கும். இந்த முன்னோடி திட்டம் ஓராண்டில் செயல்படுத்தப்படும். 532 இடங்கள் மற்றும் 71 பேருந்து நிலையங்களில் உள்ள மற்ற பேருந்து நிழற்குடைகள் இரண்டு ஆண்டுகளில் பேருந்து தகவல் அமைப்பைப் பெறும்.

இதன் மூலம் எப்போது பேருந்து நிறுத்தத்தை அடையும் என சரியான நேரத்தை பயணிகள் அறிந்துகொள்வார்கள். இவ்வாறு கூறினார். சென்னை மாநகராட்சி சாலைகளின் 88 சந்திப்புகள் மட்டுமின்றி, நெடுஞ்சாலைத்துறையால் நிர்வகிக்கப்படும் 77 சந்திப்புகளும் மேம்பாடு அடையும். சந்திப்புகள் அகலப்படுத்தப்படுவதால், சந்திப்புகளுக்கு அருகில் உள்ள சில ஆக்கிரமிப்புகள் இடிக்கப்படலாம். குடிமைத் திட்டங்களைச் செயல்படுத்தும் அனைத்து போக்குவரத்து துறையின் தளத்தை உள்ளடக்கிய டிஜிட்டல் சென்னை திட்டத்துடன் நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பும் ஒருங்கிணைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related posts

தமிழ் மாநில கட்டிட தொழிலாளர் சங்க கூட்டம்

மண்ணச்சநல்லூர் அருகே பொதுமக்களுக்கு இடையூறு பைக் சாகசத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது

போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்கள் கைது