நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கத்தால் இலவச ரேஷன் அரிசியை நம்பியுள்ள 81 கோடி மக்கள்: ஒன்றிய அரசு மீது மாயாவதி சாடல்

லக்னோ: 81 கோடி பேர் இலவச ரேஷன் அரிசியை நம்பியுள்ளனர் என்பது நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கத்தை காட்டுகிறது என பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.
ஏழை மக்களுக்கு மாதந்தோறும் 5 கிலோ இலவச அரிசி வழங்கும் பிரதம மந்திரி கரீப் கல்யாண் திட்டத்தை ஒன்றிய அரசு மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 81.35 கோடி பேர் பயன்பெறுவார்கள் என அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சட்ட மேதை அம்பேத்கரின் நினைவு நாளான அவருக்கு அஞ்சலி செலுத்தி டிவிட்டரில் பதிவிட்டுள்ள பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை சரியான முறையில் அமல்படுத்தியிருந்தால் ஏழைகள்,தொழிலாளர்கள், விவசாயிகள்,நடுத்தர மக்களின் வாழ்க்கை தரம் கணிசமாக உயர்ந்திருக்கும். ஆனால், அரசு வழங்கும் இலவச ரேஷன் அரிசியை 81 கோடி ஏழை மக்கள் சார்ந்து இருப்பார்கள் என்று சுதந்திர போராட்ட வீரர்களோ அல்லது அம்பேத்கரோ நினைத்து கூட பார்த்து இருக்கமாட்டார்கள். இது மோசமான நிலையாகும்.

போதுமான வாழ்வாதாரம் மற்றும் அதிகரிக்கும் பணவீக்கத்தால், ஏழைகள், தொழிலாளர்கள்,விவசாயிகள், நடுத்தர மக்கள் நிலைமை படுமோசமாகி விட்டது. வருமானத்தை விட செலவு அதிகமாகி விட்டது. அரசியலமைப்பை சரியான முறையில் பயன்படுத்தியிருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து தொடர்பாக உதவி எண்களை அறிவித்துள்ளது ரயில்வே துறை

சென்னை அண்ணா நகரில் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு சார் பதிவாளர் தற்கொலை முயற்சி

மன்னார்குடி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு