இந்திரா காந்தியின் சொத்துக்களை பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரியை ராஜிவ் காந்தி ரத்து செய்தார்: பிரதமர் மோடி பிரசாரம்

மொரீனா: ‘இந்திரா காந்தியின் மறைவுக்குப் பிறகு தனது சொத்துக்கள் அரசுக்கு செல்லாமல் பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரியை ராஜிவ்காந்தி ரத்து செய்தார்’ என பிரதமர் மோடி கூறி உள்ளார். மத்திய பிரதேச மாநிலம் மொரீனாவில் நேற்று நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி நேற்று பேசியதாவது: காங்கிரஸ் செய்த பாவங்களைப் பற்றி உங்கள் காதுகளை நன்றாக திறந்து வைத்து கேளுங்கள். நான் ஒரு சுவாரஸ்யமான உண்மையை சொல்லப் போகிறேன். சகோதரி இந்திரா காந்தி இறந்த போது, பரம்பரை சொத்தில் பாதி அரசாங்கத்திற்கு போகும் படியான ஒரு சட்டம் இருந்தது. அந்த சமயத்தில், இந்திரா காந்தி தனது மகன் ராஜிவ்காந்திக்கு தனது சொத்துக்களை உயில் எழுதி வைத்ததாக கூறப்பட்டது.

தனது தாயார் இந்திரா காந்தி எழுதி வைத்த தனது சொத்துக்கள் அரசாங்கத்திற்கு சென்று விடுவதை தடுக்கத்தான் அப்போதைய பிரதமர் ராஜிவ்காந்தி பரம்பரை சொத்து வரியை ரத்து செய்தார். அதன் பிறகு 4 தலைமுறைகள் தங்களுடைய சொத்துக்களை அனுபவித்து பலன் பெற்ற பிறகு, இப்போது மீண்டும் பரம்பரை சொத்து வரியை கொண்டு வர காங்கிரஸ் விரும்புகிறது. பாஜ இருக்கும் வரை பரம்பரை சொத்து வரி விதிப்பு போன்ற எந்த சட்டங்களும் வெற்றி பெற அனுமதிக்க மாட்டோம். காங்கிரஸ் அரசு அமைந்தால், உழைத்து, கஷ்டப்பட்டு நீங்கள் சேர்த்த சொத்துக்கள் உங்களிடமிருந்து கொள்ளையடிக்கும். அதை தடுக்கும் தடுப்பு சுவராக நான் இருப்பேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Related posts

கோவையில் காட்டு யானை தாக்கி இளைஞர் காயம்

இந்தியா – இலங்கை பாலம்: ஆய்வு பணி விரைவில் நிறைவு

காளிகாம்பாள் கோயில் தலைமை அர்ச்சகர் மீது வழக்குப்பதிவு: திருவல்லிக்கேணி போலீசார் நடவடிக்கை