வைகாசி மாத பூஜை சபரிமலை கோயில் நடை திறப்பு

திருவனந்தபுரம்: வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று திறக்கப்பட்டது. வரும் 19ம் தேதி வரை நடை திறந்திருக்கும். சபரிமலை ஐயப்பன் கோயிலில் வைகாசி மாத பூஜைகள் இன்று (15ம் தேதி) தொடங்குகிறது. இதை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. கோயில் தந்தரி கண்டரர் மகேஷ் மோகனர் முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்தார். நேற்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை ஆகிய வழக்கமான பூஜைகளுடன் படிபூஜை, 25 கலசாபிஷேகம், உதயாஸ்தமன பூஜை உள்பட சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

19ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும். இந்த 5 நாட்களில் தினமும் காலையில் நெய்யபிஷேகமும் நடைபெறும். 19ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் வைகாசி மாத பூஜைகள் நிறைவடையும். இதன் பின்னர் பிரதிஷ்டை தின பூஜைகளுக்காக மே 29ம் தேதி மீண்டும் நடை திறக்கப்படும்.
நேற்று மாலை நடை திறந்தபோது தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும். நிலக்கல்லில் உடனடி முன்பதிவு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

நாமக்கல் புதுச்சத்திரத்தில் 16 செ.மீ. மழை பதிவு!

இந்து மத நம்பிக்கையை மம்தா அரசு புண்படுத்துகிறது: பிரதமர் மோடி பேச்சு

வராக நதியில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை