28ம் தேதி நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழா; திமுக உள்பட 19 கட்சிகள் புறக்கணிப்பு: ஜனாதிபதியை அழைக்காததற்கு எதிர்ப்பு

புதுடெல்லி: டெல்லியில் வரும் 28ம் தேதி நடைபெற உள்ள புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவை அழைக்காததை கண்டித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் விழாவை புறக்கணிப்பதாக கூட்டாக அறிவித்துள்ளன. டெல்லியில் 96 ஆண்டுகள் பழமையான நாடாளுமன்றத்திற்கு பதிலாக புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட பிரதமர் மோடி கடந்த 2020ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். 4 மாடிகள் கொண்ட புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு ரூ.977 கோடி என மதிப்பிடப்பட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் அதன் செலவு ரூ.1,250 கோடியாக அதிகரித்தது.

கொரோனா காலத்திலும் பணிகள் இடைவிடாமல் மேற்கொள்ளப்பட்டு, தற்போது கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில் புதிய நாடாளுமன்றம் திறப்பதற்கு தயாராகி உள்ளது. இந்திய ஜனநாயக பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பிரம்மாண்ட அரசியல் சாசன அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. 1,224 எம்.பி.க்கள் அமரக் கூடிய பிரமாண்ட மக்களவை, மாநிலங்களவை அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி வரும் 28ம் தேதி திறந்து வைப்பார் என மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்துள்ளார்.

இதற்கான அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு அனைத்து எம்பிக்களுக்கும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அழைப்பிதழில் நாட்டின் முதல் குடிமகனான ஜனாதிபதியின் பெயர் இடம் பெறவில்லை. மேலும், விழாவுக்கு ஜனாதிபதிக்கு அழைப்பும் விடுக்கப்படவில்லை. எனவே ஜனாதிபதியை புறக்கணித்து விட்டு, பிரதமர் மோடி புதிய நாடாளுமன்றத்தை திறப்பதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மே 28ம் தேதி சாவர்க்கர் பிறந்தநாளில் நாடாளுமன்ற கட்டிடத்தை திறப்பதற்கும் எதிர்க்கட்சிகள் கண்டனத்தை தெரிவித்துள்ளன.

இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பதாக நாடு முழுவதும் உள்ள 19 எதிர்க்கட்சிகள் நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இது தொடர்பாக காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், ஆம் ஆத்மி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், சமாஜ்வாடி, என்சிபி, சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி), ராஷ்டிரிய ஜனதா தளம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஜேஎம்எம், தேசிய மாநாட்டு கட்சி, கேரள காங்கிரஸ்(எம்), ஆர்எஸ்பி, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, ராஷ்டிரிய லோக் தளம் ஆகிய கட்சிகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புதிய நாடாளுமன்றம் திறப்பது என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஒன்றிய பாஜ அரசால் ஜனநாயகத்துக்கு ஆபத்து என்பதை உணர்ந்த நாங்கள், எதேச்சதிகார போக்குடன் நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டதை ஏற்கவில்லை. இருந்தாலும் அனைத்து கருத்து வேறுபாடுகளையும் மறந்து விட்டு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க தயாராக இருந்தோம். ஆனால், ஜனாதிபதி திரவுபதி முர்முவை முற்றிலும் புறக்கணித்து விட்டு புது கட்டிடத்தை தானே திறப்பதற்கு பிரதமர் மோடி முடிவு செய்துள்ளது ஜனநாயகத்தை அவமதிப்பது மட்டுமில்லாமல் அதன் மீது நேரிடையாக விழுந்த அடி ஆகும்.

இந்திய அரசியல் சட்டம் 79வது விதியில்,இந்திய ஒன்றியத்துக்கு நாடாளுமன்றம் அமைய வேண்டும். அதில், ஜனாதிபதி மற்றும் மாநிலங்களவை மற்றும் மக்களவை என இரண்டு அவைகள் உள்ளடங்கியதாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி என்பவர் நாட்டின் தலைவர் மட்டுமில்லாமல், நாடாளுமன்றத்தின் முக்கிய அங்கமாக உள்ளார். ஏனென்றால் நாடாளுமன்றத்தை கூட்டி அதில், உரையாற்றுவதும், கூட்டத்தை ஒத்திவைப்பதற்கான அறிவிப்புகளையும் அவர்தான் வெளியிடுவார். ஜனாதிபதி இல்லாமல் நாடாளுமன்றம் செயல்பட முடியாது.இந்த கண்ணியமற்ற நடவடிக்கை நாட்டின் உயர்ந்த பதவியான ஜனாதிபதி பதவியை அவமதிப்பதோடு, இந்திய அரசியல் சட்டத்தின் முக்கியமான விதிகளை மீறுவதாகும். நாட்டில் பழங்குடியின பெண் ஒருவர் முதல்முறையாக ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு செய்துள்ளது கண்டிக்கத்தக்கது.

மேலும், கொரோனா பெருந்தொற்று நேரத்தில் மிக பெரிய செலவில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. நாட்டு மக்களுக்கான இந்த கட்டிடம் மக்கள் பிரதிநிதிகளான எம்பி.க்களிடம் எவ்வித கருத்தையும் கேட்காமல் கட்டப்பட்டுள்ளது. ஜனநாயகத்துக்கு புறம்பான நடவடிக்கைகள் மேற்கொள்வது என்பது பிரதமருக்கு இது ஒன்றும் புதிது அல்ல.மக்கள் பிரச்னைகளை எழுப்புகின்ற எதிர்க்கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட பல சட்டங்கள் விவாதம் இல்லாமல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. நாடாளுமன்ற கமிட்டிகள் செயல்படாத நிலையில் உள்ளன. ஜனநாயகத்தின் ஆன்மா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்ட போது, புதிய கட்டிடத்திற்கு எந்த மதிப்பும் இல்லை என்பதை பார்க்கிறோம். ஆகவே, புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்பதில்லை என்று முடிவு செய்துள்ளோம. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சிகள் 28ம் தேதி காலையில் இருந்தே தொடங்க உள்ளது. இதில் யாகம் வளர்த்து பூஜைகள் நடத்தப்பட உள்ளன. முக்கிய நிகழ்ச்சியான திறப்பு விழா பிற்பகலில் நடக்கும். இதில், பிரதமர் மோடி, சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

பிஜூ ஜனதாதளம், ஜெகன் கட்சி பங்கேற்பு
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் ஒடிசா முதல்வர் நவின்பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதாதளம், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சந்திரபாபுநாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை.

அகங்கார செங்கல்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘ஜனாதிபதியை அழைக்காமல் நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா நடத்துவது நாட்டின் உயரிய பதவிக்கு அவமானம் விளைவிப்பதாகும். நாடாளுமன்ற கட்டிடம் அகங்காரம் என்னும் செங்கலினால் கட்டப்படவில்லை. மாறாக அரசியல் சட்ட மதிப்புகளின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.

புறக்கணிக்க வேண்டாம்: ஒன்றிய அமைச்சர் வேண்டுகோள்
டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ‘‘புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா என்பது வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு. இதை அரசியலாக்கக்கூடாது. அது நல்லதல்ல. இது அரசியல் செய்யும் நேரம் அல்ல. ஏறக்குறைய 100 வருடங்களுக்குப் பிறகு நாடாளுமன்றக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு அது திறக்கப்பட உள்ளது. திறப்பு விழாவை புறக்கணிப்பது என்பது பிரச்னை இல்லாத ஒன்றை பிரச்னையாக்குவதாகும். நான் மீண்டும் ஒருமுறை அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.

எதிர்க்கட்சிகள் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த நிகழ்வில் அவர்கள் தயவுகூர்ந்து கலந்து கொள்ள வேண்டும். நாடாளுமன்றம் சபாநாயகரின் அதிகாரத்திற்கு உட்பட்டது. நாடாளுமன்றக் கட்டிடத்தை திறந்து வைக்க பிரதமர் மோடியை சபாநாயகர் ஓம் பிர்லா அழைத்துள்ளார். அதன்பேரில், பிரதமர் மோடி கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார். இது ஜனாதிபதியையோ, துணை ஜனாதிபதியையோ அவமதிப்பதாக ஆகாது’’ என்றார்.

Related posts

ஆந்திரா தேர்தல் வன்முறையில் போலீசாரின் செயல்பாடுகள் என்ன?: சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

உபியில் பாஜவுக்கு 8 ஓட்டு போட்ட 16 வயது சிறுவன்: வீடியோ எடுத்து அவரே வெளியிட்டதால் சிக்கினான்

இந்தியா கூட்டணியில் மம்தா இருப்பதை எதிர்ப்பவர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றம்: கார்கே காட்டம்