சட்டவிரோதமாக சொத்து குவிப்பு; ஒன்றிய அரசு நிறுவன மாஜி தலைவர் கைது: வீட்டில் ரூ.38 கோடி பறிமுதல்

புதுடெல்லி: சிபிஐ அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.38கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து ஒன்றிய அரசு நிறுவனமான வாப்கோஸ் முன்னாள் தலைவர் ராஜிந்தர் குமார் குப்தா மற்றும் அவரது மகன் கவுரவ் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வாப்கோஸ் எனப்படும் நீர் மற்றும் மின்சார ஆலோசனை சேவை லிமிடெட்டின் முன்னாள் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் ராஜிந்தர் குமார் குப்தா. வாப்கோஸ் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும்.

இது ஜல்சக்தி அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றது. இதில் 2011ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2019ம் ஆண்டு மார்ச் வரை பதவியில் இருந்த ராஜிந்தர் குமார் குப்தா சட்டவிரோதமாக வருமானத்துக்கும் அதிகமாக சொத்து குவித்ததாக புகார் எழுந்தது. இது குறித்து ராஜிந்தர் குப்தா, அவரது மகள் ரீமா சிங்கால், மகன் கவுரவ் சிங்கால் மற்றும் மருமகள் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

இதனை தொடர்ந்து ராஜிந்தர் சிங் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 19 இடங்களில் உள்ள வீடு மற்றும் அலுவலங்களில் நேற்று முன்தினம் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். செவ்வாயன்று ரூ.20 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் நேற்று மேலும் ரூ.18 கோடி என மொத்தம் ரூ.38கோடி சிக்கியது.

சிபிஐ சோதனையில் மொத்தம் ரூ.38 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஏராளமான நகைகள், சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்ததிலேயே இது அதிகபட்ச ரொக்க பணமாகும். இதனை தொடர்ந்து வாப்கோஸ் முன்னாள் தலைவர் ராஜிந்தர் குமார் மற்றும் அவரது மகன் கவுரவ் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

Related posts

சென்னை மணலி புதுநகர் அருகே தனியாருக்கு சொந்தமான பெயிண்ட் குடோனில் தீ விபத்து

பெண் போலீசாருக்கு தேவையான வசதிகள் செய்வதில் தமிழ்நாடு காவல்துறை முன்னிலையில் உள்ளது: டிஜிபி சங்கர்ஜிவால் பெருமிதம்

யூடியூபர் சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்