இது சாதாரண தேர்தல் அல்ல, நமது ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை நிலைநிறுத்துவதற்கான போராட்டம்: I.N.D.I.A கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்..!!

டெல்லி: இது சாதாரண தேர்தல் அல்ல, நமது ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை நிலைநிறுத்துவதற்கான போராட்டம் என I.N.D.I.A கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். அண்மையில் நாடுமுழுவதும் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலுக்கான இறுதி வாக்குபதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் தாமதமாக வெளியிட்டது. குறிப்பாக முதற்கட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை 11 நாட்கள் கழித்தும், இரண்டாம் கட்ட தேர்தல் பதிவான இறுதி வாக்குப்பதிவு சதவீதத்தை 4 நாட்கள் கழித்தும் தேர்தல் ஆணையம் தாமதமாக வெளியிட்டது. வெளியிட்ட தரவுகளிலும் தேர்தல் நடந்து முடிந்த அன்று வெளியான சதவீதத்திற்கும், நீண்ட தாமதத்திற்கு பிறகு வெளியான வாக்குப்பதிவு சதவீதத்திற்கும் 3 முதல் 4 சதவீதம் வரை சில முரண்பாடுகள் இருந்தது.

இத்தகைய முரண்பாடுகளை சுட்டி காட்டி தேர்தல் ஆணையத்தின் அணுகுமுறை என்பது கவலை அளிக்கும் விதத்தில் இருப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக நாட்டின் ஜனநாயகத்தையும், அரசியல் சாசனத்தையும் பாதுகாப்பதற்காக தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருவதாகவும் ஆனால் அண்மைக்கால செயல்பாடுகளின் மூலம் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் தாழ்ந்து இருப்பதாகவும் தேர்தல்களின் சுதந்திரமான மற்றும் நியாயமான தன்மை குறித்து கடுமையான சந்தேகங்களை எழுப்புகின்றன என்றும் அவர் சுட்டிகாட்டுயுள்ளார்.

இது மட்டுமின்றி அடுத்தகட்டமாக நடைபெறுகின்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை இதுவரை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை என சில ஊடங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இவையெல்லாம் உண்மையா? எனவும் கேள்வி எழுப்பினார். மேலும் இவற்றிற்கெல்லாம் தேர்தல் ஆணையம் பதிலளித்து நேர்மையான மற்றும் சுதந்திரமான தேர்தலை உறுதி செய்வதற்கான குறைந்த பட்ச தரத்தை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தை பாதுகாப்பது நமது கலாச்சாரம், நோக்கம் என தெரிவித்துள்ள கார்கே இத்தகைய முரண்பாடுகளுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்று பட்டு கூட்டாக குரலெக் எழுப்ப வேண்டும் எனவும் I.N.D.I.A கூட்டணி சேர்ந்த தலைவர்களுக்கு மல்லிகார்ஜுன கார்கே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts

செய்யாறு மார்க்கெட் பகுதியில் சுகாதாரமான குடிநீர் வழங்க கோரி பெண்கள் திடீர் சாலை மறியல்

அதிமுக ஆட்சியின்போது பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் பல கோடி ரூபாய் ஊழல் : 50 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!

ஜூன் 1-ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள் கூட்டம் நடைபெறும்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு