ரூ.2 ஆயிரத்திற்காக கணவனை கொன்று தற்கொலை நாடகமாடியது அம்பலம்: மனைவி உள்பட 4 பேர் கைது

வந்தவாசி: வங்கி கணக்கில் இருந்து ரூ.2ஆயிரத்தை எடுத்து செலவு செய்ததால் கணவனை அடித்து கொன்றுவிட்டு தற்கொலை நாடகமாடிய மனைவி உள்பட 4பேரை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் செந்தில்பிரபு (42). இவர் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள இளங்காடு கிராமத்தில் மரப்பட்டறையில் கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். செந்தில்பிரபு, வந்தவாசி டவுன் தேனருவி நகரில் உள்ள மாமியார் வீட்டிலேயே குடும்பத்துடன் தங்கியிருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் செந்தில்பிரபு தற்கொலை செய்து கொண்டதாக கவிதா, கும்பகோணத்தில் உள்ள செந்தில்பிரபுவின் சகோதரர் விக்னேஷ்பிரபுவிற்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து விக்னேஷ்பிரபு உடனடியாக வந்து தனது சகோதரர் சடலத்தை பார்த்துள்ளார். அதில் கழுத்தில், முகத்தில் காயம் இருந்ததால் சந்தேகம் அடைந்த அவர் வந்தவாசி தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக கவிதா, மைத்துனி, மைத்துனர், மாமியார் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கவிதா தனது கணவரை உறவினர்களுடன் சேர்ந்து தாக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதுகுறித்து கவிதா அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: கவிதா செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் உள்ள தனியார் கார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது ஏடிஎம் கார்டு மூலமாக செந்தில்பிரபு ரூ.2 ஆயிரம் எடுத்து செலவு செய்துவிட்டாராம். இதுதொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாய் தகராறில் கவிதா அவரது சகோதரி சாந்தி, சகோதரர் சந்தோஷ், தாய் காசியம்மாள் ஆகிய 4 பேரும் சேர்ந்து தாக்கியுள்ளனர்.

இதில் செந்தில்பிரபு சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர் அவர், தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியுள்ளனர். விசாரணையில் 4 பேரும் சேர்ந்து அடித்து கொன்றதை ஒப்புக்கொண்டனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார், கவிதா உள்பட 4 பேரையும் கைது செய்து வந்தவாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் செந்தில்குமார் 4 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து கவிதா, சாந்தி, காசியம்மாள் ஆகியோர் வேலூர் பெண்கள் மத்திய சிறையிலும், சந்தோஷ் ஆண்கள் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

Related posts

பலாப்பழத்தை பறிக்க மரத்தை முட்டியபோது மின்கம்பி அறுந்து விழுந்து காட்டு யானை பலி

கோடை மழை கொட்டியும் நீர்வரத்து குறைவு; பெரியாறு அணைக்கு வரும் நீரை திசை மாற்றுகிறதா கேரளா?; தமிழக விவசாயிகள் குற்றச்சாட்டு

பிரஜ்வல் ஆபாச வீடியோ விவகாரம்; ரூ.100 கோடி தருவதாக கூறினேனா?: டி.கே.சிவகுமார் ஆவேசம்