மனித வளர்ச்சி குறியீடு:193 நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 134வது இடம்

புதுடெல்லி: ஐநா வெளியிட்டுள்ள உலக நாடுகளின் மனித வளர்ச்சி குறியீட்டில் இந்தியாவுக்கு 134வது இடம் கிடைத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை உலக நாடுகளின் மனித வளர்ச்சி குறியீடு குறித்து கணக்கீடு நடத்தி அறிக்கை வெளியிட்டது.அதில், கடந்த 2021ம் ஆண்டு மொத்தம் உள்ள 191 நாடுகளில் இந்தியாவுக்கு 135வது இடம் கிடைத்தது. 2022ம் ஆண்டில் இந்தியா ஒரு படி முன்னேறி 193 நாடுகளில் 135 வது இடத்துக்கு வந்துள்ளது.

உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு 193 நாடுகளில் 134 வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் மனித வளர்ச்சிக் குறியீடு(எச்டிஐ) மதிப்பு 0.633 லிருந்து 0.644 ஆக 2022 ல் அதிகரித்து, நாட்டை நடுத்தர மனித வளர்ச்சி பிரிவில் வைத்துள்ளது. 2022 ல், இந்தியா அனைத்து எச்டிஐ குறியீடுகளான ஆயுட்காலம், கல்வி மற்றும் தனிநபர் மொத்த தேசிய வருமானம் ஆகியவற்றில் முன்னேற்றம் கண்டது. ஆயுட்காலம் 67.2 லிருந்து 67.7 ஆக உயர்ந்தது.

பள்ளிப்படிப்பின் எதிர்பார்க்கப்பட்ட ஆண்டுகள் 12.6ஐ எட்டியது, பள்ளிப்படிப்பின் சராசரி ஆண்டுகள் 6.57 ஆக அதிகரித்தது. மொத்த தனிநபர் வருமான தொகை 6,542 டாலரில் இருந்து 6,951 டாலர் ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2022ல் நாடு முன்னேறியிருந்தாலும், தெற்காசிய அண்டை நாடுகளான வங்கதேசம் (129 வது), பூடான் (125 வது), இலங்கை (78 வது) மற்றும் சீனா (75 வது) போன்றவற்றுக்குப் பின்னால் தான் இன்னும் உள்ளது.

சீனா மூன்று இடங்கள் முன்னேறியுள்ளது, அதே நேரத்தில் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை ஐந்து இடங்கள் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்தியாவில் பாலின பாகுபாடு அதிகமாக உள்ளது.தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தில் இந்தியாவில் மிகப்பெரிய பாலின இடைவெளி உள்ளது. பெண்களுக்கும் (28.3%) ஆண்களுக்கும் (76.1%) வித்தியாசம் 47.8% ஆக உள்ளன.

* சமத்துவமின்மை அதிகரிப்பு
கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு உலகின் பல்வேறு நாடுகளின் நிலை குறித்து ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டம்(யுஎன்டிபி) அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், உலகம் முழுவதும் சமத்துவமின்மை மீண்டும் அதிகரித்து வருவதாக அறிக்கை கூறுகிறது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு, பணக்கார மற்றும் ஏழ்மையான நாடுகளுக்கு இடையிலான இடைவெளி 2020ம் ஆண்டு முதல் விரிவடையத் தொடங்கியது.

உலகின் 40 சதவீத வர்த்தகம் மூன்று அல்லது சில குறிப்பிட்ட நாடுகளில் நடக்கிறது.பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களான அமேசான், ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் பங்கு சந்தை மதிப்பு 193 ஐநா உறுப்பு நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட 90 % அதிகம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

* சுவிட்சர்லாந்து முதலிடம்
2022 ம் ஆண்டு புள்ளிவிவரங்கள் அடிப்படையில்,அதிக மனித வளர்ச்சி மதிப்பெண்களைக் கொண்ட 10 நாடுகள் பட்டியலில் சுவிட்சர்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து, ஹாங்காங், டென்மார்க், ஸ்வீடன் முன்னணியில் உள்ளன. ஜெர்மனி மற்றும் அயர்லாந்து 7வது இடத்தில் உள்ளன. சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து 10வது இடத்தில் உள்ளன.அமெரிக்கா, லக்சம்பர்க்குடன் 20வது இடத்தைப் பிடித்துள்ளது. மனித வளர்ச்சி குறைந்த நாடுகள் பட்டியலில் சியரா லியோன், பர்கினா பாசோ, ஏமன், புருண்டி, மாலி, சாட், நைஜர், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, தெற்கு சூடான் மற்றும் சோமாலியா ஆகிய நாடுகள் உள்ளன.

Related posts

வாக்கு எண்ணிக்கை நாளில் ரொம்ப உஷாராக இருங்க… முகவர்களுக்கு செல்வப்பெருந்தகை அறிவுறுத்தல்

101வது பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் நினைவிடத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகளுக்கு ஏற்பாடு

ஏஐ மற்றும் டேட்டா சயின்ஸில் பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு குறுகிய கால சான்றிதழ் படிப்பு: ஏ.ஐ.சி.டி.இ அறிமுகம்