இமாச்சலில் மாயமான தனது மகன் வெற்றி குறித்து தகவல் தந்தால் ரூ.1 கோடி சன்மானம் அளிக்கப்படும்: சைதை துரைசாமி அறிவிப்பு

சென்னை: இமாச்சலில் மாயமான தனது மகன் வெற்றி துரைசாமி பற்றி தகவல் அளித்தால் ரூ.1 கோடி சன்மானம் வழங்குவதாக சைதை துரைசாமி அறிவித்துள்ளார். சென்னை அதிமுக முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, கடந்த வாரம் இமாச்சலப்பிரதேசம் மாநிலத்திற்கு சென்றிருந்த நிலையில், அங்குள்ள சட்லஜ் நதியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி வெற்றி துரைசாமி மாயமானதாக தகவல் வெளியானது. இந்த விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார். உதவியாளர் கோபிநாத் என்பவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேவேளையில் மாயமான வெற்றி துரைசாமியை சட்லஜ் நதியில் 2-வது நாளாக தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அவரை தேடும் பணியில் தேசியப் பேரிடர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வெற்றி துரைசாமியின் நிலை குறித்து தற்போது வரை எந்த அதிகாரபூர்வ தகவலும் இல்லாத சூழலில், அவரது தந்தையான சைதை துரைசாமி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், காணாமல் போன தனது மகன் குறித்து தகவல் தெரிவிக்க பொதுமக்களிடம் வேதனையுடன் கேட்டுக்கொண்டிருக்கும் சைதை துரைசாமி, மாயமான தனது மகன் வெற்றி துரைசாமி பற்றி தகவல் அளித்தால் அவர்களுக்கு ரூ.1 கோடி சன்மானம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும், சட்லஜ் ஆற்றங்கரையோரம் வசிக்கும் பழங்குடியின மக்களிடமும் வெற்றி துரைசாமி குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்கும்படி காவல்துறையினர் அறிவுறுத்தியிருக்கிறார்கள். இமாச்சல பிரதேசத்தில் விபத்தில் சிக்கிய சைதை துரைசாமி மகன் குறித்து தகவலறிய 2 நாளாகும். இமாச்சலில் வானிலை மிக மோசமாக இருப்பதால், சில இடங்களில் கடும் பனிமூட்டத்தால் மீட்புப்பணியில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக இமாச்சலப் பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது.

Related posts

சென்னை மணலி புதுநகர் அருகே தனியாருக்கு சொந்தமான பெயிண்ட் குடோனில் தீ விபத்து

பெண் போலீசாருக்கு தேவையான வசதிகள் செய்வதில் தமிழ்நாடு காவல்துறை முன்னிலையில் உள்ளது: டிஜிபி சங்கர்ஜிவால் பெருமிதம்

யூடியூபர் சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்