அமெரிக்க துணை தூதரகத்தில் போலி சான்றிதழ் கொடுத்தவர் உள்பட 12 பேருக்கு குண்டாஸ்: கமிஷனர் நடவடிக்கை

துரைப்பாக்கம்: அமெரிக்காவில் படிப்பதற்காக, போலி கல்வி சான்றிதழ் தயாரித்து அமெரிக்க துணை தூதரகத்தில் கொடுத்த இன்ஜினியர் உள்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 12 பேரை மாநகர போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். சென்னையில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடக்காமல் தடுக்கவும், பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், கொலை, கொலை முயற்சி குற்றங்களில் ஈடுபடுபவர்கள், திருட்டு, செயின் பறிப்பு, சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், போதைப் பொருட்கள் கடத்துபவர்கள், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு மிரட்டி பணம் பறிப்பவர்கள், நில அபகரிப்பு, ஆபாச வீடியோ தயாரிப்பு, மணல் கடத்தல், உணவு பொருட்கள் கடத்தல், போக்சோ மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள், கொரோனா நோய் பாதிப்பில் உயிர்காக்கும் மருந்துகளை பதுக்கி விற்பவர்கள் ஆகியோரை போலீசார் தீவிரமாக கண்காணித்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து வருகின்றனர்.

அந்த வகையில், சென்னை மாநகரில் கடந்த 21ம் தேதி முதல் 27ம் தேதி வரை, வழிப்பறியில் ஈடுபட்டு வந்த திருவொற்றியூரை சேர்ந்த தினேஷ்குமார் (28), கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கொருக்குபேட்டையை சேர்ந்த தட்சணாமூர்த்தி (51), வியாசர்பாடியை சேர்ந்த தினேஷ் (24), கோடம்பாக்கத்தை சேர்ந்த கார்த்திக் (எ) மிட்டாய் கார்த்திக் (23), திருவல்லிக்கேணி சேர்ந்த சுந்தர் (எ) சுந்தரேசன் (25), மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த கபிலன் (26),

பிராட்வே பகுதியை சேர்ந்த ஜெயலட்சுமி (44) அவரது மகன் முரளி (22) மற்றும் வீடு புகுந்து திருடியதாக ராமநாதபுரம் மாவட்டம் கஞ்சிரான்குடியை சேர்ந்த சாகுல் அமீது (50), வழிப்பறியில் ஈடுபட்ட விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த சந்தோஷ்குமார் (28), அமெரிக்கா சென்று படிப்பதற்காக, தூதரகத்தில் போலி கல்வி சான்றிதழ் தயாரித்து கொடுத்த ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமநேரியை சேர்ந்த ரிஷிகேஷ் (33), திவாகர் ரெட்டி (32), கஞ்சா வழக்கில் தொடர்புடைய வில்லிவாக்கத்தை சேர்ந்த டேவிட் (24) ஆகிய 13 பேரை போலீசார் பரிந்துரைப்படி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

கே.எம்.சி.எச். மருத்துவமனையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட தொழிலாளி உடல் ஒப்படைப்பு..!!

ஆபாச வீடியோ உள்ளிட்ட வழக்குகளில் தேடப்பட்டு வரும் பிரஜ்வல் ரேவண்ணா முன்ஜாமின் கோரி மனு..!!

சென்னை அருகே டயர் கிடங்கில் தீ விபத்து..!!