கூடுவாஞ்சேரி அருகே கல்லூரி மாணவர்களிடம் செல்போன் பறிப்பு: 4 வாலிபர்கள் கைது

கூடுவாஞ்சேரி: கல்லூரி மாணவர்களை கத்திமுனையில் மிரட்டி செல்போன், லேப்டாப் பறித்த வழக்கில் மாணவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். கூடுவாஞ்சேரி அருகே வல்லாஞ்சேரியில் பிரபலமான தனியாருக்கு சொந்தமான 15 மாடிகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு வெளிமாநிலங்களை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் தங்கியிருந்து, பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரியில் படிக்கின்றனர். இந்நிலையில், வல்லாஞ்சேரியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்களிடம், கடந்த 29ம் தேதி இரவு 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வழிமறித்து, கத்திமுனையில் மிரட்டியது. பின்னர் கல்லூரி மாணவர்களிடம் இருந்து 3 செல்போன், 2 லேப்டாப் ஆகியவற்றை பறித்துக்கொண்டு அக்கும்பல் தப்பித்து சென்றது.

இந்த புகாரின்பேரில், கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகள் மூலம் 4 பேர் கொண்ட மர்ம கும்பலை வலைவீசி தேடினர். விசாரணையில், அதே தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்களிடம் சகஜமாக பழகி, அவர்களை மிரட்டி செல்போன், லேப்டாப் பறித்தது ஊத்துக்கோட்டையை சேர்ந்த சாதிக் (20), மோகன்பாபு (21), காஞ்சிபுரத்தை சேர்ந்த மாதேஸ்வரன் (21), விஷ்வா (23) எனத்தெரியவந்தது. இதில் சாதிக், விஷ்வா ஆகிய இருவரும் பொத்தேரியில் ஒரு தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் 3ம் ஆண்டு படிக்கின்றனர்.

இவர்களின் நண்பர்களான மாதேஸ்வரன், மோகன்பாபு ஆகிய இருவரும் படித்துவிட்டு வேலை தேடி வருகின்றனர். இதில், 4 பேரும் சேர்ந்து, வல்லாஞ்சேரியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்களிடம் சகஜமாக பழகி, கடந்த 29ம் தேதி இரவு அக்கல்லூரி மாணவர்களை கத்திமுனையில் மிரட்டி 3 செல்போன், 2 லேப்டாப் பறித்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, நேற்றுமுன்தினம் மாலை 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 செல்போன், 2 லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

மே-19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

பலாப்பழத்தை பறிக்க மரத்தை முட்டியபோது மின்கம்பி அறுந்து விழுந்து காட்டு யானை பலி

கோடை மழை கொட்டியும் நீர்வரத்து குறைவு; பெரியாறு அணைக்கு வரும் நீரை திசை மாற்றுகிறதா கேரளா?; தமிழக விவசாயிகள் குற்றச்சாட்டு