2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு பணி கிடையாது: ராஜஸ்தான் மாநில சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

புதுடெல்லி: இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு பணி வழங்க முடியாது என்ற ராஜஸ்தான் மாநில அரசின் சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ராஜஸ்தான் சட்டப்பேரவையில் கடந்த 1989ம் ஆண்டு ‘இரண்டு குழந்தைகள் கொள்கை’ என்ற திட்டத்தின்கீழ், இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் அரசு பணியை பெற தகுதியற்றவர்கள் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து முன்னாள் ராணுவ வீரர் ராம்ஜி லால் என்பவர் மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஆனால் அதனை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ராம்ஜி லால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், தீபங்கர் தத்தா, கே.வி.விஸ்வநாதன் ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘‘ராஜஸ்தான் அரசு கொண்டு வந்த ‘இரண்டு குழந்தைகள் கொள்கை’ தொடர்பான சட்டம் செல்லும். இந்த சட்டம் பாரபட்சமானது கிடையாது. மேலும் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்கிறது.

எனவே இந்த விவகாரத்தில் முன்னாள் ராணுவ வீரர் ராம்ஜி லால் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுவதாக தெரிவித்தனர். முன்னதாக கடந்த 2017ம் ஆண்டு ஜனவரியில் பாதுகாப்புப் படையில் இருந்து ஓய்வு பெற்ற ராம்ஜி லால், ராஜஸ்தான் காவல்துறையில் கான்ஸ்டபிள் பதவிக்கு 2018ம் ஆண்டு மே மாதம் விண்ணப்பித்திருந்தார். ஆனால் ஜூன் 1, 2002ம் ஆண்டுக்குப் பிறகு அவருக்கு இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்ததால், ராஜஸ்தான் காவல்துறை துணை சேவை விதிகள், 1989இன் கீழ் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்பதல், ராம்ஜி லால் நீதிமன்றங்களை அணுகியது குறிப்பிடத்தக்கது.

Related posts

மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து தொடர்பாக உதவி எண்களை அறிவித்துள்ளது ரயில்வே துறை

சென்னை அண்ணா நகரில் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு சார் பதிவாளர் தற்கொலை முயற்சி

மன்னார்குடி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு