அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு ஓ.ஆர்.எஸ். பாக்கெட்டுகள் வினியோகம்

*வெயிலின் தாக்கத்தை சமாளிக்க நடவடிக்கை

நாகர்கோவில் : நாகர்கோவிலில் அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு ஓ.ஆர்.எஸ். பாக்கெட்டுகள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் இயல்பை விட அதிகரித்து உள்ளது. வரும் நாட்களில் இன்னும் 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கடும் வெப்பம் காரணமாக, மக்களுக்கு உடல் சார்ந்த பாதிப்புகள் ஏற்பட கூடும் என்பதால், உடலின் நீர் சமநிலையை மேம்படுத்த மாவட்டந்தோறும் பல்வேறு பகுதிகளில் ஓ.ஆர்.எஸ். பாக்கெட்டுகளை வினியோகம் செய்ய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதற்காக தமிழ்நாடு முழுவதும் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ். கரைசல் பாக்கெட்டுகள் இருப்பில் வைக்கும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. விவசாய கூலி தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகளுக்கும் ஓ.ஆர்.எஸ். கரைசல் வினியோகிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதன் ஒரு கட்டமாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு ஓ.ஆர்.எஸ். கரைசல் பாக்கெட்டுகள் வினியோகம் செய்யப்படுகின்றன. அதன்படி நாகர்கோவிலில் வடசேரி பஸ் நிலையத்தில் நேற்று டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு ஓ.ஆர்.எஸ். பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன. இவற்றை நீரில் கலந்து டிரைவர்கள், கண்டக்டர்கள் அருந்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர்.

பொது மேலாளர் மெர்லின் ஜெயந்தி, துணை மேலாளர் ஜெரோலின் உள்ளிட்ட அதிகாரிகள் கொண்ட குழுவினர் இதை கண்காணிக்கிறார்கள். முதற்கட்டமாக 1500 ஓ.ஆர்.எஸ். கரைசல் பாக்கெட்டுகள் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் – பஞ்சாப் அணிகள் மோதல்

விக்கிரவாண்டியில் திறந்தவெளி கிணற்றில், மனித மலம் கழிக்கப்பட்டதாக கிராம மக்கள் புகார்

மேகமலை அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு: தரைப்பாலம் மூழ்கியது