ஆவடி அருகே நகைக்கடையில் புகுந்து துப்பாக்கியை காட்டி ரூ.1.50 கோடி நகைகள் கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது..!!

சென்னை: சென்னை ஆவடி அருகே நகைக்கடையில் புகுந்து துப்பாக்கி முனையில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னையை அடுத்துள்ள ஆவடி முத்தாபுதுப்பேட்டையில் பிரகாஷ் என்பவர் கிருஷ்ணா ஜுவல்லரி என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நகைக்கடைக்கு கடந்த 15ம் தேதி 4 மர்ம நபர்கள் தமிழக பதிவெண் கொண்ட மாருதி ஸ்விஃப்ட் காரில் வந்துள்ளனர். இவர்களில் 4 பேர் கடையின் உரிமையாளரான பிரகாஷின் கை மற்றும் கால்களை கட்டிப்போட்டுத் துப்பாக்கி முனையில் மிரட்டி நகைக் கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான தங்க நகைகள், வெள்ளி, ரூ.5 லட்சம் பணம் மற்றும் ஐபோன் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து முத்தாபுதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நகைக்கடைக்குள் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களின் பதியப்பட்ட காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 8 தனிப்படை அமைத்து ஆந்திரா, ராஜஸ்தானில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், துப்பாக்கி முனையில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் இருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்டு கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தினேஷ் குமார், சேட்டன் ராம் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அடைக்கலம் கொடுத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் நெருங்கி வருகின்றனர். கூடிய விரைவில் அவர்களும் கைது செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

10 நிமிடங்கள் கட் ஆன திருப்பூர் ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி காட்சி

செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த இருவேறு சாலை விபத்தில் 9 பேர் உயிரிழப்பு