குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது: கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கும் ஆயுள் தண்டனையை உறுதி செய்து ஐகோர்ட் தீர்ப்பு..!!

சென்னை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜுக்கு விதித்த வாழ்நாள் சிறை உறுதி செய்யப்பட்டுள்ளது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ், கடந்த 2015ம் ஆண்டு ஆணவ கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உட்பட 10 பேருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து 10 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதேபோல் வழக்கில் இருந்து 5 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கோகுல்ராஜின் தாயாரும் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுக்களை நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் முக்கிய சாட்சியான சுவாதியை நீதிமன்றத்திற்கு வரவழைத்து நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பிறழ் சாட்சி அளித்ததாக சுவாதிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

வழக்கில் கைப்பற்றப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவு உள்ளிட்ட ஆதாரங்களை சேகரித்ததில், குறைகள் இருப்பதாகவும், மின்னணு ஆதாரங்கள் திரிக்கப்பட்டிருக்கலாம் என்றும் யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். அதேசமயம் கோகுல்ராஜ் திட்டமிட்டு கொல்லப்பட்டதாகவும், அரசு தரப்பு சாட்சிகள் இதனை உறுதிப்படுத்தியதாகவும், அரசு தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார். கோகுல்ராஜ் கடைசியாக சென்ற திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் மற்றும் அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இடத்தில் நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது. மதுரை சிறப்பு நீதிமன்ற தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ், அருண், குமார், சதீஷ்குமார், ரகு, ரஞ்சித், சந்திரசேகரன், செல்வராஜ், பிரபு, கிரிதர் உள்ளிட்ட 10 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் மூலம் தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும் என்பது நினைவுகூரத்தக்கது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் இருந்து 5 பேர் விடுவிக்கப்பட்ட உத்தரவும் சரியே என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உட்பட 10 பேரின் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. வழக்குகளில் சிசிடிவி காட்சிகளை கையாள்வதில் விதிகளை வகுத்தும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

கார் கவிழ்ந்து விபத்து 3 பேர் பரிதாப பலி: 5 பேர் படுகாயம்

எஸ்எஸ்எல்சியில் தாய், மகள் தேர்ச்சி மகளை விட தாய் 5 மதிப்பெண் அதிகம்

இந்திய ரிசர்வ் வங்கிக்கு புதிய செயல் இயக்குநர் நியமனம்: சென்னையில் பணியாற்றியவர்