கோகுல்ராஜ் ஆணவ கொலையில் ஆயுள் தண்டனை பெற்ற யுவராஜுக்கு சிறையில் முதல் வகுப்பு கேட்டு மனைவி மனு: சிறை நிர்வாகம் பதில்தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள யுவராஜுக்கு, சிறையில் முதல் வகுப்பு ஒதுக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு கோவை சிறை நிர்வாகம், மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் மாவீரன் தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு முதல் வகுப்பு அறை ஒதுக்கக் கோரி அவரது மனைவி சுவிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில், யுவராஜின் சமூக அந்தஸ்து மற்றும் அவரது கல்வித் தகுதி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு அவருக்கு முதல் வகுப்பு ஒதுக்க உத்தரவிட வேண்டுமென கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.காசிராஜன் ஆஜராகி, தங்களது மனுவை முறையாக பரிசீலிக்காமல் ஆட்சியர் பரிந்துரைப்படி சிறை நிர்வாகம் நிராகரித்துள்ளதாக கூறினார். கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக் ஆஜராகி, மனு குறித்து பதிலளிக்க அவகாசம் வேண்டுமென கோரினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்கும்படி, சிறை நிர்வாகம், மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் 29ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related posts

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு

தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம் அமல்

பழைய பேருந்துகளை பழுதுபார்க்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!!