காதலியின் தந்தை செல்போனை திருடி உ.பி முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த காதலன் கைது: காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கடுப்பு

கான்பூர்: காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதலியின் தந்தை செல்போனை திருடி, அந்த எண்ணில் இருந்து உத்தரபிரதேச முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநில காவல் துறையின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 112 என்ற அவசர கால எண்ணை, கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கொலை செய்ய உள்ளதாக மிரட்டல் விடுத்தார். இந்த மிரட்டல் தொடர்பாக கான்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர்.

இந்த நிலையில், தனது காதலியின் தந்தைக்கு சொந்தமான செல்போன் எண்ணில் இருந்து, கொலை மிரட்டல் விடுத்த 19 வயது இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து கான்பூர் கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் (தெற்கு) அங்கிதா சர்மா கூறுகையில், ‘கான்பூர் அடுத்த பேகம் பூர்வா பகுதியில் வசிக்கும் அமீன் என்பவர், அதே பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு பெண்ணின் பெற்றோர் சம்மதிக்கவில்லை.

அதனால் தனது காதலியின் தந்தைக்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற நோக்கில், அவரது செல்போனை அமீன் திருடியுள்ளார். இ-ரிக்‌ஷா ஓட்டுநரான அந்த பெண்ணின் தந்தை, தனது செல்போன் திருட்டு போனது குறித்து உள்ளூர் போலீசில் புகார் அளித்திருந்தார். தொடர் விசாரணையில் செல்போனை திருடியது, அமீன் என்பது தெரியவந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனது காதலியின் தந்தையின் செல்போனை திருடி அமீன், அந்த நம்பரில் இருந்து முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. அதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட அமீன் மீது மூன்று கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளோம்’ என்றார்.

Related posts

மழையில் நெல் மூட்டைகள் சேதம்; உணவு தானிய பாதுகாப்பு கிடங்குகள் கட்ட வேண்டும்: முதல்வருக்கு, ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி கோயில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்க கூடாது: சென்னைஐகோர்ட் கருத்து

சென்னை வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் மார்பு மற்றும் விலா எலும்புக்கு சிறப்பு சிகிச்சை மையம் தொடக்கம்