ஆந்திர மாநிலத்தில் தங்கி உள்ள முன்னாள் முதல்வர் சந்திரபாபுவின் வீடு, மாஜி அமைச்சரின் சொத்துக்கள் முடக்கம்: ஜெகன்மோகன் அரசு அதிரடி

திருமலை: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபுவின் வீடு, மாஜி அமைச்சரின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு இருந்தபோது அமராவதியை தலைநகராக அறிவித்தார். அதற்காக விவசாயிகளிடம் இருந்து நிலம் கையப்படுத்தும் சட்டத்தின்கீழ் 34 ஆயிரம் ஏக்கர் நிலம் அரசு கையகப்படுத்தியது. இதில், மாஸ்டர் பிளான் வடிவமைப்பின்போது சந்திரபாபு, முன்னாள் அமைச்சர் நாராயணா, சந்திரபாபு உறவினரான லிங்கமனேனி ரமேஷ், அவர்களது உறவினர்கள் மற்றும் பினாமிகள் பெரும் நில அபகரிப்பில் ஈடுபட்டதாக முதல்வர் ஜெகன்மோகன் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு குற்றம்சாட்டினர். இதற்காக சிறப்பு விசாரணை அமைப்பை மாநில அரசு அமைத்தது. இந்த விசாரணை அமைப்பு முறைகேட்டில் ஈடுபட்டதற்கான ஆதாரம் உள்ளதாக அரசுக்கு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், அமராவதியை தெலுங்கு தேசம் கட்சி அரசின் மையப்புள்ளியாக வைத்து ஊழல் செய்துள்ளனர். இதில் முக்கிய குற்றவாளிகளாக சந்திரபாபு நாயுடு மற்றும் முன்னாள் அமைச்சர் நாராயணா செயல்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அமராவதி மாஸ்டர் பிளான் வடிவமைப்பில் மத்திய அரசின் அனுமதியின்றி சிங்கப்பூர் இன்டர்நேஷனல் எண்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் அப்போதைய தெலுங்கு தேசம் அரசு ஒப்பந்தம் செய்தது. இதையடுத்து, சிங்கப்பூர் நிறுவனம் மாஸ்டர் பிளான் தயாரித்தது. லிங்கமனேனி ரமேஷ், லிங்கமனேனி ராஜசேகர், ஹெரிடேஜ் புட்ஸ், சந்திரபாபு பினாமி ஆகியோருக்கு சொந்தமான நிலங்கள் நில குவிப்பு வரம்பிற்குள் வராத வகையில் திட்டம் தீட்டப்பட்டது.
இதற்காக உண்டவல்லி கிராமத்தில் கிருஷ்ணா நதிக்கரையில் இருந்த வீட்டை இலவசமாக சந்திரபாபுவுக்கு லிங்கமனேனி ரமேஷ் வழங்கியது தெரியவந்தது. ஆனால், சந்திரபாபு பொது பணத்தில் இருந்து வீட்டு வாடகை பெற்றுள்ளார். லிங்கமனேனி குடும்பத்தினர் கிருஷ்ணா நதிக்கரை ஒட்டிய வீட்டை தேசபக்தியின் காரணமாக அப்போதைய அரசாங்கத்திற்கு இலவசமாக வழங்கியதாக லிங்கமனேனி ரமேஷ் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார். இலவசமாக கொடுத்த வீட்டிற்கு பொது நிதியில் இருந்து எப்படி வீட்டு வாடகை சந்திரபாபு எடுத்தார் என்ற கேள்விக்கு எங்கும் பதில் அளிக்கவில்லை.

தேசபக்தியால் வழங்கிய வீட்டை மாநில அரசிடம் தான் கொடுக்க வேண்டும். ஆனால் சந்திரபாபுவுக்கு தனிப்பட்ட முறையில் கொடுத்து என்ன பயன்? அரசிடம் இலவசமாக கொடுத்திருந்தால் சந்திரபாபு முதல்வர் பதவியில் இருந்து இறங்கியதும் அந்த வீட்டை காலி செய்ய வேண்டும். அந்த வீட்டை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். முதல்வர் பதவியில் இருந்து விலகிய பின் அரசின் கீழ் உள்ள முதல்வர் முகாம் அலுவலகத்தை காலி செய்ய வேண்டும். குடியிருப்பு அரசாங்கத்திற்கு சொந்தமானது. ஆனால், 2019ம் ஆண்டு முதல்வர் பதவியில் இருந்து விலகிய பிறகும், சந்திரபாபு அதே வீட்டில் தான் இருக்கிறார். எனவே, தேசபக்தியால் லிங்கமனேனி ரமேஷ் அரசுக்கு இலவசமாக கொடுத்தது உண்மைக்கு புறம்பானது.

சந்திரபாபுவிடம் கொடுத்தது முறைகேடுகளுக்கு துணையாக இருந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் நாராயணா தனது பினாமிகளாக தன்னிடம் பணிபுரியும் ஊழியர்கள் பெயரில் பல ஆயிரம் ஏக்கர் நிலம் அமராவதி தலைநகர் என அறிவிப்பதற்கு முன்பு வாங்கியுள்ளார்.
இதுபோல் பல முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகவும் சந்திரபாபுவும், நாராயணனும் 32 விதமான சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துக்களை பறிமுதல் செய்ய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் குற்றவியல் சட்ட ஆணையின் கீழ் சிஐடி அனுமதி கோரியது. அதன்படி, ஊழல் தடுப்பு சட்டம் 1988ன் கீழ் லிங்கமனேனி குடும்பத்தினர் சந்திரபாபுவுக்கு க்விட் ப்ரோ நிறுவனத்தின் கிருஷ்ணா நதி படுகையில் வழங்கிய தற்போது சந்திரபாபு தங்கியுள்ள வீட்டையும், முன்னாள் அமைச்சர் நாராயணா அவரது பினாமிகள் சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

Related posts

பாஜக மீது தேர்தல் ஆணையத்தில் திரிணாமுல் காங். புகார்!

மெட்ரோ ரயில் கட்டுமான நிறுவன உதவி மேலாளர் மீது தாக்குதல்: பின்னணி பாடகர் வேல்முருகனிடம் போலீஸ் விசாரணை

திண்டுக்கல்லில் எலுமிச்சை பழங்களின் விலை கடுமையாக உயர்வு!