மாஜி அமைச்சரின் சகோதரர் கரன்சியை பதுக்கியதால் புலம்பும் இலை நிர்வாகிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘கரன்சியை மாஜி அமைச்சரின் சகோதரர் பதுக்கியதால் புலம்பும் ரத்தத்தின் ரத்தங்கள் பற்றி சொல்லுங்களேன்’’ என்று ஆரம்பித்தார் பீட்டர் மாமா.
‘‘புரம் என்று முடியும் தனி தொகுதியில் பழம்பெரும் நடிகர் பெயரை கொண்ட அதிமுக வேட்பாளர் களமிறக்கப்பட்டு இருக்கிறார். இபிஎஸ்சின் நெருக்கமானவருக்கு நெருங்கியவர் என்று கூறப்பட்ட நிலையில் பிரசார செலவு, நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் செலவுக்கு பல்க் அமவுண்டை தொகுதி பொறுப்பாளரான மாஜி அமைச்சரின் சகோதரரிடம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். ஆனால் பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் கரன்சியை இறக்காததால் இலை கட்சியினரும், முரசு கட்சியினரும் சொந்த காசை போட்டு டீ வாங்கி சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்களாம். வேட்பாளரிடம் கேட்டால் எல்லாம் மாஜி அமைச்சர், அவர் சகோதரரை கையை காண்பித்துவிட்டு செல்கிறாராம்.

இதனால் பிரசாரத்திற்குச் சென்ற ரத்தத்தின் ரத்தங்கள் அதிருப்தியில் இருக்கிறார்களாம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அமைச்சரின் சகோதரர் கரன்சியை வாரி இறைத்த ஆசையில் பின்னால் சென்ற ரத்தத்தின் ரத்தங்களுக்கு பெரும் ஏமாற்றம்தான் மிஞ்சியதாம். அவர் வீட்டு காசு கொடுக்கத் தேவையில்ல, வேட்பாளருக்கு இபிஎஸ் கொடுத்த காசை கொடுக்காமல் ஏமாற்றலாமா? என்றும் புலம்பி வருகிறார்களாம்.
அதுமட்டுமா அமைச்சரின் சகோதரர் இளம்வட்டங்களை வைத்துக்கொண்டு சுற்றி வருவதாலும் மூத்த நிர்வாகிகள் அதிருப்தியில் இருக்கிறார்களாம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் இதே பாணியை கையாண்டதால்தான் மாஜி அமைச்சர் படுதோல்வியை சந்தித்தார். இப்போதும் அதே பாணியை அவரது சகோதரர் கையில் எடுத்துள்ளதால் தோல்வி எழுதப்படாத உறுதியாகி விட்டதாக சொந்தக் கட்சியினரே புலம்புவதுதான் ஹைலெட்டாக உள்ளதாம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தாமரை குறித்து சிலாகித்திருக்குதாமே இலை பார்ட்டி?’’
‘‘இலைக்கும், தாமரைக்கும் ஒட்டுமில்லை, உறவுமில்லை என்று சேலத்துக்காரரு சத்தியம் பண்ணாத குறையா தினமும் சொல்லிக்கிட்டு இருக்காரு. ஆனா, அவரது கட்சியில் இருக்கும் சிலர், தொடர்ந்து அவரது சத்தியத்திற்கு பங்கம் ஏற்படுத்திக்கிட்டு இருக்காங்களாம். இலை கட்சியின் சார்பா விவாதங்களில் பங்கேற்பவரு, மாங்கனி மாவட்டத்தை சேர்ந்த லாயர். இவர் விவாதங்களில் தாமரை கட்சி குறித்து முன்வைக்கும் கருத்துக்கள், சில நேரங்களில் இலையின் தலைமைக்கு பெரும் தலைவலியா மாறி விடுதாம். சமீபத்திய விவாதம் ஒன்றில் இலைக்கட்சி சார்பில் பங்கேற்ற லாயரு, தாமரை கட்சியின் வளர்ச்சி குறித்து சிலாகித்து பேசினாராம். எதிரணியில் பேசினவங்க, நீங்க இலையின் சார்பில் பேசுறீங்களா? அல்லது தாமரையின் சார்பில் பேசுறீங்களா? என்று போட்டு வாங்கினாங்களாம். இதனால் சுதாரிச்சிக்கிட்டவரு, தாமரைக்கு சப்போர்ட்டா பேசலை. களநிலவரத்தை தான் சொல்றேன் என்று சமாளித்தாராம்.

இதை நேரலையில் பார்த்துக் கொண்டிருந்த இலையின் நிர்வாகிகள், நல்லா சொல்றாரு களநிலவரம் என்று கலாய்ச்சு தள்ளினாங்களாம். என்ன இருந்தாலும் நம்ம கட்சி அவருக்கு புகுந்த வீடு தானே. ஏற்கனவே இருந்த பிறந்த வீட்டு பெருமையை பேசாமல் இருப்பாரா? என்று ேகள்வியும் எழுப்பினாங்களாம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘உளவுத் துறையினருக்கு தனி அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டுள்ளதாமே…?’’ கேள்வி எழுப்பினார் பீட்டர் மாமா.
‘‘தேர்தல் அறிவிப்புக்கு முன்பே பிரதமர் மோடி நெல்லை வந்து பிரசார கூட்டத்தில் பேசினார். தற்போது அதே மைதானம் தான் ராகுல்காந்திக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது மோடி கூட்டம் தேர்தலுக்கு முன்பு, ராகுல்காந்தி கூட்டம் கடைசி கட்ட பிரசாரம். எனினும் உளவுத் துறையினர் தான் படு பிசியாக இயங்குகின்றனர். அதாவது, கடந்த மாதம் பிரதமர் மோடி நெல்லை வந்த போது கூட்டத்திற்காக போடப்பட்டிருந்த இருக்கைகள் அதிக அளவில் காலியாக இருந்தன. மோடி பேசும் போதே பலர் சாரை, சாரையாக புறப்பட்டுச் சென்றனர். இந்நிலையில் ராகுல்காந்தியின் பிரசாரத்திற்கு எவ்வளவு சேர்கள் போடப்படுகிறது. எவ்வளவு தொண்டர்கள், பொதுமக்கள் கூடுவார்கள்? எந்த மாவட்டங்களில் இருந்தெல்லாம் எவ்வளவு தொண்டர்கள் கூடுகின்றனர். எதிர்பார்க்கப்படும் வாகனங்கள் எவ்வளவு? என்பன உள்ளிட்ட தகவல்களை சேகரித்து தர ஒன்றிய உளவுத் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ராகுல் வந்து சென்ற பின்னர் திரண்ட பொதுமக்கள், தொண்டர்கள் எவ்வளவு பேர் என துல்லியமாக கணக்கெடுத்து அறிக்கை சமர்ப்பிக்கவும் வாய்மொழி உத்தரவாம். இதற்காக ஒன்றிய உளவுத்துறையினர் மும்முரமாக களத்தில் இறங்கியுள்ளனர்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கருப்பு ஆடுகளை `களை’ எடுக்கப்போறாராமே மலை?…’’
‘‘கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜ வேட்பாளர் மலைக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய, அக்கட்சியிலேயே நிர்வாகிகள் இல்லை. நல்ல பேச்சாற்றல் கொண்ட தொண்டர்களும் இல்லை. இதனால், பா.ஜ தேர்தல் பிரசாரம் பிசுபிசுத்து போய்விட்டது. மலை பிரசாரத்துக்கு வரும்போது மட்டுமே தொண்டர்கள் அங்குமிங்கும் தலைகாட்டுறாங்க. அவர், வெளிமாவட்டங்களுக்கு சென்றுவிட்டால், பிரசாரம் கடுமையாக `டல்’ அடிக்குது. தேசிய மகளிர் அணி தலைவராக இருக்கும் வானதி சீனிவாசன் எம்எல்ஏ, முன்னாள் மண்டல செயலாளர் ஜி.கே.எஸ்.செல்வகுமார், மாவட்ட தலைவர் ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் யாருமே பிரசாரத்தில் அதிக அக்கறை செலுத்துவது இல்லை. “கோவையில் நமது வேட்பாளருக்கு மூன்றாவது இடம் உறுதியாகிவிட்டது… இனி, பிரசாரம் செய்தால் என்ன? செய்யாவிட்டால் என்ன…?’’ என பலர் ஒதுங்கியே இருக்கின்றனர். இப்படி ஒதுங்கியிருந்த ஒரு நபர், மதுரையில் உள்ள இன்னொரு பா.ஜ நிர்வாகியுடன் டெலிபோனில் பேசி, மனக்குமுறலை கொட்டிவிட்டார். இந்த உரையாடல், வெளியே கசிந்து, வைரலாகி வருகிறது. இந்த ஆடியோவை கேட்டதும், பா.ஜ தொண்டர்கள் மேலும் சோர்வடைந்து விட்டனர். இதனால், கடுப்பாகிப்போன மலை, “நமது கட்சிக்குள்ளேயே பல கருப்பு ஆடுகள் உள்ளன…. முதலில் இவற்றை `களை’ எடுக்க வேண்டும். இந்த கருப்பு ஆடுகள் யார் யார்? என பட்டியல் சேகரியுங்கள்’’ என மாவட்ட தலைவருக்கு உத்தரவு போட்டுள்ளார். இதன்காரணமாக, கோவை மாவட்ட தாமரை கட்சிக்குள் கடுமையான சலசலப்பு நிலவி வருகிறது’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

49 தொகுதிகளில் இறுதிகட்ட வாக்குசேகரிப்பு: 5ம் கட்ட தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது: ராகுல், ராஜ்நாத் சிங், ஸ்மிருதி, உமர் அப்துல்லா போட்டி

நாகர்கோவில் அருகே இன்று அதிகாலை வேனுடன் எரிந்து சாம்பலான இசைக் கருவிகள்: போலீசார் தீவிர விசாரணை

பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!