வரலாற்றில் முதன்முறையாக தமிழக பக்தர்களின்றி கச்சத்தீவு திருவிழா தொடக்கம்

ராமேஸ்வரம்: வரலாற்றில் முதன் முறையாக தமிழக பக்தர்களின்றி கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 2 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் பங்கேற்க, தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பணம் செலுத்தி முன்பதிவு செய்திருந்தனர். ஆனால் தண்டனை அறிவிக்கப்பட்டு சிறையில் இருக்கும் 4 மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் தீவுப்பகுதி மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதோடு, கச்சத்தீவு திருவிழாவுக்கு படகுகளை அனுப்ப இயலாது என தெரிவித்தனர். இதையடுத்து நேற்று துவங்கிய கச்சத்தீவு திருவிழாவில், வரலாற்றில் முதன்முறையாக தமிழக பக்தர்கள் யாரும் பங்கேற்கவில்லை. இலங்கையை சேர்ந்த பங்குத்தந்தையர்கள், அருட்சகோதரிகள், நெடுந்தீவு உதவி பிரதேச செயலர் மற்றும் பக்தர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். படகுகள் செல்லாத நிலையில் ராமேஸ்வரம், பாம்பன் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதையடுத்து முன்பதிவு செய்து ராமேஸ்வரம் வந்த 300க்கும் மேற்பட்ட வெளியூர் பக்தர்கள், ஏமாற்றத்துடன் சொந்த ஊர் திரும்பினர்.

கச்சத்தீவு திருவிழாவை இந்திய பக்தர்கள் புறக்கணித்ததால், மாலையில் தொடங்க வேண்டிய கொடியேற்ற துவக்க விழா நேற்று காலையிலேயே நடந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மாலை திருப்பலியை தொடர்ந்து சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடந்தது. இரவில் புனித அந்தோணியாரின் தேர் பவனி நடந்தது. இரு நாட்டு பக்தர்கள் பங்கேற்கும் இத்திருவிழாவில், இந்திய பக்தர்கள் முற்றிலும் கலந்து கொள்ளாததால் தொப்புள் கொடி உறவுகளை சந்திக்க முடியாமல் ஈழத்தமிழர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆலய சுற்று வளாகம் பெருமளவு வெறிச்சோடி காணப்பட்டது.

Related posts

நீட் மோசடி: பீகாரில் நீட் தேர்வுக்கு 24 மணி நேரத்திற்கு முன்பு மாணவர்களிடம் ரூ.32 லட்சம் பெற்று கொண்டு வினாத்தாளை கசியவிட்டதாக தரகர்கள் ஒப்புதல் வாக்குமூலம்

சென்னை திருவொற்றியூரில் எருமை மாடு முட்டியதில் பெண் உள்பட 2 பேர் படுகாயம்

புராதன சின்னங்களை சுற்றி பார்க்க மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்: போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் அவதி