வயதான தாயை ஏமாற்றி பிரபல நடிகை ஷோபனா வீட்டில் பணம் திருட்டு: வேலைக்கார பெண் சிக்கினார்

சென்னை: தேனாம்பேட்டை ஸ்ரீமான் சீனிவாசா சாலையை சேர்ந்தவர் பிரபல நடிகை ஷோபனா. தளபதி உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை ஷோபனா தனது தாயுடன் 2 மாடி கொண்ட குடியிருப்பில் வசித்து வருகிறார். தரை தளத்தில் ஷோபனா பரதநாட்டிய பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறார். முதல் தளத்தில் அவரது தாய் ஆனந்தம் வசித்து வருகிறார். 2வது தளத்தில் நடிகை ஷோபனா வசித்து வருகிறார். ஷோபனாவின் தாய் வயது மூப்பு காரணமாக, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்த விஜயா என்பவர் கடந்த ஓராண்டாக வீட்டிலேயே தங்கி அவருக்காக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஆனந்தம் வைத்திருந்த பணம் காணாமல் போனது. வீட்டிற்கு வெளியாட்கள் யாரும் வராத நிலையில் பணம் மட்டும் மாயமாகி வந்ததால், வேலைக்கார பெண் விஜயா மீது சந்தேகம் வந்தது. உடனே அவரை அழைத்து கேட்ட போது, நான் பணத்தை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். இதனால் நடிகை ஷோபனா, வீட்டில் அடிக்கடி பணம் திருடு போவதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வேலைக்கார பெண் விஜயா மீது சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார். போலீசார் ஷோபனா வீட்டில் பணியாற்றி வந்த வேலைக்கார பெண் விஜயாவை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது, அவர், கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை நடிகை ஷோபனாவின் தாய் ஆனந்தம் வீட்டில் இருந்து சிறுக சிறுக ரூ.41 ஆயிரம் வரை திருடியதை ஒப்புக்கொண்டார். மேலும், அந்த பணத்தை நடிகை ஷோபனாவின் கார் டிரைவர் முருகனிடம் கொடுத்து, தனது ஊரில் உள்ள மகளுக்கு ஜிபே மூலம் அனுப்பியது தெரியவந்தது. வறுமை காரணமாக, பணத்தை திருடிவிட்டேன். என்னை வேலையில் இருந்து நீக்கி விடாதீர்கள் என்று நடிகை ஷோபனாவிடம் வேலைக்கார பெண் விஜயா போலீசார் முன்னிலையில் கேட்டுக்கொண்டார்.

பிறகு நடிகை ஷோபனா, விஜயா தொடர்ந்து வீட்டில் வேலை செய்யட்டும், அவர் திருடிய ரூ.41 ஆயிரத்தை சிறுக சிறுக மாத ஊதியத்தில் பிடித்து கொள்கிறேன். அவர் மீது நடவடிக்கை வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். இருந்தாலும், போலீசார் பணம் திருடிய விஜயா மற்றும் அவருக்கு உதவிய டிரைவர் முருகனிடம் கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.

Related posts

காளிகாம்பாள் கோயில் தலைமை அர்ச்சகர் மீது வழக்குப்பதிவு: திருவல்லிக்கேணி போலீசார் நடவடிக்கை

லாரி ஓட்டுனரிடம் செல்போன் திருடிய 4 பேர் கைது

மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பில் சென்னை விமான நிலையம்