ஒரே நாளில் 31 பெண்களுக்கு கு.க. அறுவை சிகிச்சை: ஆரம்ப சுகாதார நிலையம் அசத்தல்

ஈரோடு: அந்தியூர் அருகே உள்ள அத்தாணி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரே நாளில் முதன்முறையாக 31 பெண்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை லேப்ராஸ்கோப் முறையில் செய்யப்பட்டது. குடும்ப நலத்துறை சார்பில் பொதுமக்கள், பெண்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டாரத்திற்கு உட்பட்ட அத்தாணி, சின்னத்தம்பி பாளையம், எண்ணமங்கலம், பர்கூர், ஓசூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுத்த தாய்மார்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் அந்தியூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சக்தி கிருஷ்ணன் தலைமையில் குடும்ப நலத்துறை இயக்குனர் ராஜசேகர் மேற்பார்வையில், மருத்துவர் லட்சுமிபிரியா மற்றும் மருத்துவப் பணியாளர்களைக் கொண்டு அத்தாணி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் லேபராஸ்கோபி முறையில் நேற்று ஒரேநாளில் 31 தாய்மார்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்களுக்கு உரிய பாதுகாப்பான வழிமுறைகள் குறித்தும் எடுத்துக் கூறப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் முதன்முறையாக ஒரேநாளில் 31 பெண்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து அந்தியூர் வட்டார மருத்துவ பணியாளர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

Related posts

ஒடிசாவில் 35 சட்டப் பேரவை தொகுதியுடன் 49 தொகுதிகளில் நாளை 5ம் கட்ட வாக்குப்பதிவு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

தமிழ்நாட்டில் 100 டிகிரிக்கும் கீழ் குறைந்த வெயில்

உத்தரப்பிரதேசத்தில் நடந்த தேர்தலில் பாஜகவுக்கு இளைஞர் ஒருவர் 8 முறை வாக்களித்ததாக வெளியான வீடியோவால் பரபரப்பு