ஒவ்வொருவரின் வாக்கும் முக்கியம் 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்

*கலெக்டர் கிறிஸ்துராஜ் வேண்டுகோள்

திருப்பூர் : ஒவ்வொருவரின் வாக்கும் முக்கியம் என்பதால் நாடாளுமன்ற தேர்தலில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் வாக்களிக்க வேண்டும் என, மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன பேரணி நடந்தது. இதனை தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது: நாடாளுமன்ற பொதுத்தேர்தல் குறித்த அறிவிப்பு இந்திய தேர்தல் ஆணையத்தால் கடந்த 16-ம் தேதி வெளியிடப்பட்டது.

நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில் நாள்தோறும் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதில் திருப்பூர் மாநகராட்சி, எல்.ஆர்.ஜி. மகளிர் அரசு கலைக் கல்லூரியில் நாடாளுமன்ற பொது தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து வாக்காளர் விழிப்புணர்வு பேரணி, வாக்காளர் உறுதிமொழி கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது.

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மூத்த குடிமக்களுக்கு வீட்டிலிருந்தவாறு தபால் மூலம் வாக்களிக்க 12 டி படிவங்கள் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் கலந்து கொண்ட வழிப்புணர்வு பேரணி தொடங்கி வைக்கப்பட்டது. தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை பயணிகள் ஆட்டோகளில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து குறும்படம் ஒளிபரப்பு நிகழ்ச்சியை பார்வையிடப்பட்டது. இந்த அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் நாள்தோறும் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிபடுத்தப்படவுள்ளது.

மேலும், நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் 18 வயது பூர்த்தியடையந்த அனைத்து புதிய இளம் வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டும். கல்லூரிகளில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம், விழிப்புணர்வு பேரணி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது., இளம் வாக்காளர்கள் தேர்தல் நாளன்று அச்சமின்றி வாக்களிக்க வேண்டும்.

ஒரு நாள் விடுப்பு கிடைத்து விட்டது என எண்ணாமல் கண்டிப்பாக வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க வேண்டும். மேலும், வாக்களிப்பது என்பது ஒவ்வொருவரின் உரிமை அதனை எந்த காரணத்திற்காகவும் விட்டு கொடுக்க வேண்டாம். வாக்களிக்கும் உரிமை பெற்ற வாக்காளர்கள் வாக்களிப்பது என்பது ஜனநாயகத்தின் கடமையாகும். ஒவ்வொரு வாக்காளர்களின் வாக்குகளும் மிகவும் முக்கியமானது என்பதை மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக 18 வயது பூர்த்தியடைந்த இளம் வாக்காளர்கள் தங்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதை எண்ணி தவறாமல் வாக்களிக்க வேண்டும். உங்கள் ஊரில் உள்ளவர்கள், குடும்பத்தினர்கள், நண்பர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துக்கூறி தேர்தல் நாளில், தவறாமல் வாக்கை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், உதவி கலெக்டர் (பயிற்சி) செல்வி கிர்திகா, வட்டார போக்குவரத்து அலுவலர் (தெற்கு) ஆனந்த், மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சிதாதேவி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) குமார ராஜா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சதீஸ்குமார், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் சுரேஷ் மற்றும் தொடர்புடைய தேர்தல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

செங்கல்பட்டில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து

தொடர்மழை காரணமாக சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு 5 நாட்கள் தடை விதிப்பு!

நீலகிரி மாவட்டம் குன்னூரில் மினி டெம்போ கவிழ்ந்து விபத்து: 14 பேர் காயம்