காந்தி,நேரு சித்தாந்தத்திற்கு முடிவு கட்ட மோடி முயற்சி: காங். குற்றச்சாட்டு

மும்பை: காந்தி,நேரு சித்தாந்தத்தை முடிவு கட்டுவதற்கு பாஜவும்,மோடியும் முயற்சி செய்கின்றனர் என காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா குற்றம் சாட்டினார். மகாராஷ்டிரா மாநிலம் லோனவாலாவில் காங்கிரஸ் தொண்டர்களுக்கு மாநில அளவிலான பயிற்சி முகாம் நடந்தது. இதில்,பேசிய கேரள சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் மகாராஷ்டிரா காங்கிரஸ் பொறுப்பாளருமான ரமேஷ் சென்னிதலா,‘‘மோடியும்,பாஜவும் ஜனநாயகத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காகவே செயல்படுகின்றனர். மோடி மீண்டும் பிரதமரானால், பலர் சிறைக்கு செல்ல வேண்டியிருக்கும். ஏனென்றால் ஜனநாயகம், அரசியல் சட்டம் மீது அவருக்கு நம்பிக்கை இல்லை. இந்த தேர்தல் செய் அல்லது செத்துமடி என்ற நிலையில் கட்சியினர் சந்திக்க வேண்டியிருக்கிறது. காந்தி- நேரு சித்தாந்தத்திற்கு முடிவு கட்டவே நேருவை மோடி தொடர்ந்து விமர்சிக்கிறார்.மக்களவை தேர்தலில் மகாராஷ்டிராவில் 48 தொகுதிகளை கைப்பற்றுவதற்கு ஒற்றுமையாக செயல்பட வேண்டும்’’ என்றார்.

முன்னாள் முதல்வர் பிருத்விராஜ் சவான்,‘‘பிரதமர் மோடி தனது தலைமையில் இந்தியா உலகின் 5வது பொருளாதாரமாக மாறியதாகவும் 2047க்குள் நாடு வளர்ச்சி அடையும் என்கிறார். வளர்ச்சி அடைந்த நாட்டின் தனிநபர் வருமானம் 13,845 டாலராக இருக்க வேண்டும். இந்தியாவில் தனிநபர் வருமானம் 2,800 டாலர். பொருளாதார வளர்ச்சி 10 சதவீதமாக இருக்க வேண்டும். ஆனால், இந்தியாவின் வளர்ச்சி 6 மற்றும் 6.25 சதவீதத்தில் உள்ளது. மோடி மக்களை தவறாக வழிநடத்துகிறார்’’ என்றார்.

Related posts

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு

காதலுக்கு வயது தடையில்லை 80 வயது தாத்தாவை காதலித்து மணந்த 23 வயது இளம்பெண்