தேர்தல் திருவிழா

தமிழகத்தில் வரும் ஏப். 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் கூட்டணி பேச்சுகள் பரபரப்பாக நடந்து வந்தன. திமுக கூட்டணியில் கடந்த முறை இடம் பெற்றுள்ள கட்சிகளே இந்த தேர்தலிலும் தொடர்கின்றன. இக்கூட்டணியை பொறுத்தவரை திமுக 21 தொகுதிகள், காங்கிரஸ் 9, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச்சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொமதேகவுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

திமுக சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். மத்திய சென்னையில் தயாநிதி மாறன், ஸ்ரீபெரும்புதூரில் டி.ஆர்.பாலு, தூத்துக்குடியில் கனிமொழி உட்பட சிட்டிங் எம்பிக்கள் 10 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தேனியில் தங்கதமிழ்செல்வன் உட்பட 11 தொகுதிகளுக்கு புதிய வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை ஏற்கனவே அறிவித்து விட்டன. இதையடுத்து முதல் கூட்டணியாக தேர்தல் தொடர்பான முன்னேற்பாடு பணிகளில் கட்சியினர் தீவிரமாக களமிறங்கி விட்டனர். இந்தியா கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் நாளை முதல் தீவிர பிரசாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈடுபட உள்ளார்.

பாஜ கட்சியுடனான கூட்டணி முறிவுக்கு பின், அதிமுக சலசலத்த நிலையில் காணப்படுகிறது. கூட்டணியில் ஏற்கனவே இருந்த சில கட்சிகளுடன் அதிமுக தொடர்ந்து பேசி வந்தது. அதிமுகவா, பாஜவா என கடைசி வரை கண்ணாமூச்சி காட்டி வந்த பாமக, திடீரென பாஜ கூட்டணியில் இணைந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிகவுடனான கூட்டணியை உடனடியாக உறுதி செய்தார். இந்த கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த முறை அதிமுக கூட்டணியில் வலுவான கட்சிகள் இடம் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

முதல்கட்டமாக, தென்சென்னையில் ஜெயவர்த்தனன், வடசென்னையில் ராயபுரம் மனோ உள்பட 16 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக நேற்று வெளியிட்டுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக, மீதமுள்ள இடங்களில் போட்டியிட உள்ள அதிமுக வேட்பாளர்கள் அடுத்தகட்டமாக அறிவிக்கப்பட உள்ளனர். அதே நேரம் பாமகவை கடைசி நேரத்தில் ஸ்கெட்ச் போட்டு தங்கள் பக்கம் இழுத்துள்ள பாஜ கட்சி, அமமுக, ஓபிஎஸ் அணி மற்றும் சில சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதன்மூலம் தமிழக நாடாளுமன்ற தேர்தல் இம்முறை மும்முனைப்போட்டியை சந்திக்கிறது. வேட்பாளர்களை அறிவித்த கையோடு, திமுக தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டது.

அதன்படி, காஸ் சிலிண்டர் விலை ரூ.500 ஆக குறைப்பு, ரூ.75க்கு பெட்ரோல், ரூ. 65க்கு டீசல், கூட்டுறவு வங்கிக்கடன் வட்டி தள்ளுபடி, நீட் தேர்வில் விலக்கு, ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை, அனைத்து மாநில மகளிருக்கு ரூ.1,000 உரிமைத்தொகை, கச்சத்தீவு மீட்பு, ரயில்வேக்கு தனி பட்ஜெட், தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் முழுமையாக அகற்றம், குடியுரிமை திருத்தச்சட்டம் ரத்து, ஜிஎஸ்டி சட்டத்தில் திருத்தம், மாணவர்களுக்கு ரூ.4 லட்சம் வரை வட்டியில்லா கல்விக்கடன், சர்வதேச விமான நிலையங்களாக மதுரை, தூத்துக்குடியை தரம் உயர்த்துதல், காலை உணவு திட்டத்தை மாநிலங்கள் முழுவதும் நடைமுறைப்படுத்துதல் உட்பட பல அற்புதமான அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது. ஒரு மாதத்தில் தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. திருவிழா தருணங்களில் தேர்தல் திருவிழாவும் களைகட்டட்டும்.

Related posts

மதுரையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற அரசு பேருந்தின் பின்பக்க டயரில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு

கடலூர் அருகே தனியார் மற்றும் அரசுப் பேருந்து மோதிக் கொண்ட விபத்தில் 25 பேர் காயம்

மே-12: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை