தேர்தல் திருவிழா

நாட்டின் 18வது மக்களவை தேர்தல் அறிவிப்புகள் வெளிவந்து பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. ஏப். 19 முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடக்கிறது. இன்று மாலை 6 மணிக்கு தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் முதற்கட்ட தேர்தல் நடக்கும் 102 மக்களவை தொகுதிகளில் பிரசாரம் ஓய்கிறது. அங்கு வாக்குப்பதிவுக்கான அத்தனை ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டு விட்டன. பிரதமர் மோடி தலைமையில் 2014ம் ஆண்டு முதல் நடக்கும் இந்த 10 ஆண்டு பா.ஜ ஆட்சியை பரிசீலித்து வாக்களிக்க வேண்டியது வாக்காளர்கள் கடமை. 2014ல் தேர்தல்பிரசாரத்தின் போது பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகள் என்ன?. இன்று நாட்டின் நிலைமை என்ன என்பதை ஓட்டு போடப்போகும் அத்தனை பேரும் சிந்திக்க வேண்டியதும், அதன் அடிப்படையில் வாக்களிக்க வேண்டியதும் அவசியம்.

அப்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.70ஐ எட்டிய போது எத்தனை போராட்டங்கள், எத்தனை மறியல்கள். இந்த இடைப்பட்ட 10 ஆண்டு காலத்தில் எத்தனை உயரம் சென்று விட்டது பெட்ரோல், டீசல் விலை?. அதே போல் அன்றாடம் வீடுகளில் பயன்படுத்தும் சமையல் காஸ் சிலிண்டர் விலை எத்தனை உயரத்திற்கு சென்று விட்டது. அன்று 20 ரூபாய் உயர்த்தியதற்கு வீதியெங்கும் சிலிண்டரை தூக்கி கொண்டு பா.ஜ தலைவர்கள் பேரணி செல்லவில்லையா? ஆனால் மோடி ஆட்சியில் 1150 ரூபாய் எட்டிய பிறகு, தேர்தலை கணக்கில் வைத்து தீபாவளிக்கு பரிசு, தேர்தலுக்கு முன் சலுகை என்றெல்லாம் ஏமாற்றி இப்போதும் ரூ.818.50ஆக இல்லையா?. காய்கறி, சமையல் எண்ணெய், அரிசி, பருப்பு உள்ளிட்ட சமையலுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் விலை இன்று எந்த இடத்தில் உள்ளது?.

இவை எல்லாவற்றையும் விட வேலைவாய்ப்பு? ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்கப்படும் என்று 2014ல் வாக்குறுதி அளித்தாரே மோடி?. அப்படியானால் இந்த 10 வருடத்தில் 20 கோடி பேருக்கு வேலை அளித்து இருக்க வேண்டுமே? கடந்த ஆண்டு அறிவித்த 10 லட்சம் பேருக்கான வேலை கூட இன்று வரை வழங்கி முடிக்கப்படவில்லை. ஆனால் மாதாமாதம் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றிய அமைச்சர்கள் சென்று ஒன்றிய அரசு அறிவித்த வேலைக்கான ஆர்டர்களை வழங்கினார்கள். எப்போது தேர்வு நடந்தது? எப்படி தேர்வு நடந்தது? எத்தனை பேர் எழுதினார்கள்? எத்தனை மதிப்பெண் பெற்றனர்?

இடஒதுக்கீடு அதில் கடைபிடிக்கப்பட்டதா? எந்த பட்டியல் அடிப்படையில் அத்தனை பேருக்கும் அரசு வேலை வழங்கப்பட்டது? இன்னும் எத்தனை கேள்விகள் அதில் உண்டு. அதற்கு ஏதாவது ஒரு பதில் பா.ஜ தலைவர்களிடம் உண்டா? குறைந்தபட்சம் அந்த 10 லட்சம் வேலையை நிரப்ப வெளியான அறிவிப்புகளையாவது மோடி அரசால் காட்ட முடியுமா?. அவர்களால் எதுவுமே செய்ய இயலாது. கருப்பு பணத்தை ஒழிக்கப்போவதாகவும், லஞ்ச ஊழலை ஒழிக்கப்போவதாகவும் கூறினாரே மோடி. இன்று சுவிஸ் வங்கியில் அதிக முதலீடு செய்திருப்பது இந்தியர்கள் தான். கேட்டால் கருப்பு பணம் இல்லையாம், முதலீடாம். லஞ்ச ஊழல் இப்போது தேர்தல் பத்திரங்கள் வடிவில் மாறிவிட்டது. தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக முதலீடு பெற்ற ஒரே கட்சி பா.ஜதான். இன்னும் ஏராளம் அடிக்கிக்கொண்டே போகலாம். இதற்கெல்லாம் ஒரே முடிவு, இந்த தேர்தல் திருவிழா மூலம் பொதுமக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டியது அவசியம்.

Related posts

தனியார் பட்டாசு ஆலையில் சிக்கி உயிரிழந்த ராஜமாணிக்கம் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

பட்டாசு ஆலையில் சிக்கி உயிரிழந்த ராஜமாணிக்கம் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

போதைப்பொருளை தடுக்க தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறது: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!