வரும் தேர்தலுக்கு பிறகு சந்திரபாபு நாயுடு, ஷர்மிளாவுக்கு ஆந்திராவில் `அட்ரஸ்’ இருக்காது: அமைச்சர் ரோஜா ஆவேசம்

திருமலை: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மாநில மெகா விளையாட்டு போட்டி நேற்று நடந்தது. இதில் அமைச்சரும் நடிகையுமான ரோஜா கலந்துகொண்டு தொடங்கி வைத்து பேசியதாவது: இளைஞர்களுக்காக கொடுக்கப்பட்ட விளையாட்டு கிட்களில் முதல்வர் ஜெகனின் புகைப்படம் இடம்பெற்றதை பலர் விமர்சிக்கின்றனர். அரசு திட்டத்தில் மாநில முதல்வரின் படம் வைக்காமல், ஆந்திராவுக்கு திருஷ்டி பொம்மையாக மாறிய சந்திரபாபுவின் புகைப்படத்தையா வைக்க முடியும்? வரும் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு ஆந்திராவில் முகவரி இல்லாத அரசியல்வாதிகளாக சந்திரபாபு, பவன் கல்யாண், லோகேஷ், ஷர்மிளா ஆகியோர் மாறுவர்.

அதன்பின்னர் அவர்கள் அனைவரும் தெலங்கானாவுக்கு ஓட்டம் பிடிப்பது உறுதி. ஷர்மிளா தற்போது எந்த கட்சியில் இருக்கிறார் என சிந்திக்கவேண்டும். ஜெகன்மோகனை சிறையில் அடைத்த காங்கிரசுடன் அவர் கைகோர்த்துள்ளார். தெலங்கானாவில் ஆட்சியமைத்துள்ள ரேவந்த்ரெட்டி அரசிடம் இருந்து ஆந்திராவிற்கு வரவேண்டிய ₹6000 கோடி நிலுவை தொகை, ஒருங்கிணைந்த ஆந்திரா மாநிலத்தின்போது ஆந்திராவுக்கு சேர வேண்டிய ₹1 லட்சத்து 80 ஆயிரம் கோடி சொத்துக்களை ஷர்மிளா வாங்கித்தருவாரா?.

தெலங்கானாவில் போட்டியிடுவதாக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஷர்மிளா, திடீரென காங்கிரசுடன் கைகோர்த்தது ஏன்? தற்போது ஒய்.எஸ்.ராஜசேகரரெட்டி உயிருடன் இருந்திருந்தாலும் காங்கிரசை விமர்சித்து இருந்திருப்பார். சந்திரபாபு தன்னை விட வயதில் சிறியவரான அமித்ஷா கால்களை பிடித்துக்கொண்டிருப்பது வெட்கக்கேடானது. ஆட்சிக்கு வர வேண்டும் என்ற ஆசையில் காங்கிரசுடன் ஒருமுறையும், பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்கவும் அவர் முயன்று வருகிறார். சந்திரபாபு தற்போது தரம் தாழ்ந்த அரசியல் செய்து வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்

காதல் விவகாரத்தில் கத்திக்குத்து முன்னாள் காதலன் பரிதாப பலி: இந்நாள் காதலன் வெறிச்செயல்

மும்பை வடமேற்கு தொகுதியில் EVM-ல் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள புகார் தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்