தேர்தல் பணியில் இருந்து சுத்தமாக ஒதுங்கிய மாஜி அமைச்சரை பற்றி சொல்கிறார்: தேர்தல் பணியில் இருந்து சுத்தமாக ஒதுங்கிய மாஜி அமைச்சரை பற்றி சொல்கிறார்

‘‘தேர்தல் பணியில் இருந்து இலைக்கட்சி மாஜி அமைச்சர் கடைசிவரை ஒதுங்கியே இருப்பதாக தலைமைக்கு புகார் கூறப்பட்டுள்ளதாமே?’’ என்று கேள்வியை ஆரம்பித்தார் பீட்டர் மாமா.
‘‘வடமாநில நதி பெயரில் முடியும் மாவட்டத்தில் இலைக்கட்சியில் உள்ள மாஜி அமைச்சர் தேர்தல் பணிகளில் இருந்து சைலண்டாக ஒதுங்கிக் கொண்டார். இதற்கு காரணம் இவருக்கும், மாவட்ட செயலாளரும், தற்போதைய சிட்டிங் எம்எல்ஏவுமான முருகப்பெருமான் பெயர் கொண்டவருக்கும் ஏழாம் பொருத்தம். அமைச்சராக இருந்தபோதே மாஜி அமைச்சருக்கு சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதற்கு மாசெதான் காரணமென நெருங்கிய ஆதரவாளர்களிடம் கூறி வந்தார். மேலும், அவர் எதிர்பார்த்த மாவட்ட செயலாளர் பதவியும் கிடைக்கவில்லையாம். இதையெல்லாம் நீண்ட காலமாக மனதில் வைத்திருந்த மாஜி அமைச்சர், கட்சிப் பணிகளில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கியே இருந்தார். தற்போது தேர்தல் பணிகளில் இலைக்கட்சியினர் தீவிரமாக செயல்பட்ட போதிலும், மாஜி அமைச்சரோ அவரது வாரிசுகளோ, பொதுக்கூட்டம், பிரசாரம் உட்பட எதிலும் தலை காட்டுவதில்லை. இவரது நடவடிக்கை கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. இதுதொடர்பாக தலைமைக்கும் புகார்கள் பறந்துள்ளன. ‘முதலில் தேர்தல் முடியட்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ என தலைமை கூறியதாக இலைக்கட்சியினர் பேசி வருகின்றனர்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மாம்பழ ஓட்டுக்கு குறி வைக்குதாமே இலை?’’ என்று ஆச்சரியமாக கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி மாவட்ட தொகுதியில் இலைக்கட்சியும், தாமரை கூட்டணியில போட்டியிடற மாம்பழ கட்சியும் எடப்பாடி, ஓமலூர் சட்டமன்ற தொகுதியில தீவிர கவனம் செலுத்தி வர்றாங்களாம். மாம்பழத்த விட இலை கொஞ்சம் கூடுதலா கவனம் செலுத்துதாம். ஏன்னா, இந்த 2 இடங்களில மாம்பழ கட்சிக்கு கணிசமான வாக்கு வங்கி இருக்காம். அந்த வாக்குகளை எப்படியாவது இலைக்கட்சிக்கு கொண்டு வந்துறணும்னு அங்கு ப வைட்டமினை இலைக்கட்சிக்காரங்க கணிசமா இறக்கி இருக்காங்களாம். இலைக்கட்சி விவிஐபியின் உறவினர் ஒருத்தர் எடப்பாடியிலும், இலைக்கட்சி பிரதிநிதி ஒருத்தர் ஓமலூரிலும் இதை மேற்பார்வை பார்த்துக்கிட்டு இருக்காங்களாம். இந்த 2 இடங்களிலும் ஓட்டுக்கு ஆயிரம் கொடுத்தாவது மாம்பழத்துக்கு போகும் வாக்குகளை தடுக்க குறி வைத்து காய் நகர்த்திகிட்டு வாராங்களாம். எது எப்படியோ 2வது இடத்துக்குத்தான் இலைக்கட்சியும், மாம்பழ கட்சியும் போட்டி போடுதாங்கன்னு 2 கட்சி நிர்வாகிகளிடையே பேச்சாவும் இருக்காம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பிரசாரத்தில் ‘ வைட்டமின் ப’ கொடுத்தும் கூட்டத்தை கூட்ட முடியாததால் அப்செட்டில் இருக்கிற மாஜி அமைச்சர் பற்றி சொல்லுங்களேன்’’
‘‘ கடலோர நாடாளுமன்ற தொகுதி இலை கட்சி வேட்பாளராக மாஜி அமைச்சரின் ஆதரவாளரான சுர்ஜித் என்பவர் போட்டியிடுகிறார். வேட்பாளரை எப்படியாவது வெற்றி பெற வைப்பதற்காக தொகுதி பக்கமே எட்டி பார்க்காத மணியானவர், தனது ஆதரவாளரான வேட்பாளருக்காக தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். பிரசாரம் தொடங்கிய நாள் முதல் தொகுதி மக்களிடமிருந்து எதிர்ப்பு அலை வீசுவதால் நிர்வாகிகள், தொண்டர்கள் வேட்பாளருடன் செல்வது இல்லையாம்…. இதனால் மணியானவரின் ஆதரவாளர்கள் மட்டுமே செல்கின்றனர். எந்த இடத்திலும் வேட்பாளரை வரவேற்க பெரிய அளவில் கூட்டம் இல்லாததால் மாஜி அமைச்சர் கடும் அப்செட்டில் இருந்து வருகிறார். பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிகிறது. இதனால் வேட்பாளரின் இறுதி கட்ட பிரசாரத்திலாவது மக்கள் கூட்டத்தை காட்ட வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மாஜி அமைச்சர் மேற்கொண்டிருக்காராம். ஆனா ‘விட்டமின் ப’ கொடுத்தும் கூட்டத்தை கூட்ட முடியாமல் உள்ளது. ஒரு பக்கம் தொகுதி மக்களிடமிருந்து எதிர்ப்பு அலை… இதனால் கட்சியினர் யாரை பார்த்தாலும் வேட்பாளர் எரிந்து விழுகிறார். அந்த அளவுக்கு உச்சகட்ட டென்ஷனில் இருக்கிறாரே என கட்சிக்குள் தொண்டர்கள் கமண்ட் அடிக்க ஆரம்பித்து விட்டார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலைகட்சியில சொந்தகட்சிக்கு யாரும் வேலை செய்யலையாம். விருப்பமான கட்சிக்குத்தான் திரைமறைவுல கொடி புடிக்குறாங்களாமே?’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தமிழகத்தில் அரசியல் கட்சிக்காரங்க அவங்க, அவங்க சொந்த கட்சிக்கு தீவிரமா வாக்கு சேகரிச்சிகிட்டு வர்றாங்க. ஆனா, வெயிலூர் தொகுதிய உள்ளடக்கிய வெயிலூரு, மிஸ்டர் பத்தூர் மாவட்டத்துல இருக்குற இலைகட்சிக்காரங்க அவங்க கட்சிக்கு எந்த வேலையும் செய்றதில்லையாம். எல்லாம் கடமைக்குத்தான் ஓட்டு கேட்க போறாங்களாம். மிஸ்டர் பத்தூர் மாவட்டத்துல இருக்குற மாஜி மந்திரி, அவர் வேண்டப்பட்ட சமூகத்துக்கு பின்புலத்துல இருந்து ஆதரவு கரத்தை நீட்டி திரைமறைவுல கொடி புடிச்சி வர்றாராம். அதேபோல வெயிலூர் மாவட்டத்துல இருக்குற நிர்வாகிங்க, இன்னொரு சமூகத்துக்கு சப்போட் செய்றாங்களாம். ஆனா, சொந்த கட்சிக்கு யாரும் உழைக்கவில்லையாம். இப்படி இலை கட்சியில தேர்தல் களைகட்ட, அதே கட்சியில இருக்குற இன்னொரு சமூகத்தை சேர்ந்த சில பேரு, இதை சேலத்துக்காரர்கிட்ட புகாரா தூக்கிக்கிட்டு போயிருக்காங்க. இலைகட்சி தலைமையில இந்த விசாரணை தான் போய்கிட்டிருக்குதாம். என்னதான் விசாரணை நடந்தாலும், உடனே நடவடிக்கை எடுக்க இவரு என்ன ஜெ. வான்னு, கட்சிக்குள்ளவே பேசிக்கிறாங்க’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஆளுங்கட்சிக்கு தேர் இழுத்து புலம்பும் காக்கி தரப்பு பற்றி சொல்லுங்களேன்’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘அது புதுவையில நடந்த கூத்து. அங்க நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ள உள்துறை அமைச்சர் சிவாயமானவரை ஆதரித்து அக்கட்சியின் டெல்லி தலைமை, ரோடு ஷோவை பிரதான கடை வீதியான அண்ணா சாலையில் தொடங்கி காந்தி வீதி வழியாக அஜந்தா சந்திப்பு வரை அரங்கேற்றியது. இதனால் தொழில் பாதித்து வியாபாரிகள் ஒருபுறம் புலம்ப, ஆளில்லாமல் வெறிச்சோடியதால் ஆளுங்கட்சி தரப்பு கடும் அப்செட் ஆனது. பில்டப் கொடுக்க போலீஸ் படையை பாதுகாப்பு என்ற பெயரில் அங்கு குவித்திருந்த ஆளுங்கட்சி தரப்பால் வாகன ஓட்டிகள் புலம்பித் தள்ள, தேரை இழுத்த கதையா போலீசாரின் நிலைமை மாறியதுதான் தற்போது ஊர்முழுக்க பரவலான பேச்சு… பாஜக தேசிய தலைமை ஏறியிருந்த பிரசார வாகனம் ஊர்ந்து செல்ல, பாதுகாப்பு வளையம் என்ற பெயரில் அந்த வாகனத்தை சுற்றி முன்பக்கமாக கயிறுகளை கட்டியிருந்த காக்கி தரப்பு, காவல்துறை தொப்பிகளை அணிந்தபடி வண்டியை இழுத்துச் சென்றதுதான் வேதனை… இதைப் பார்த்த பொதுமக்கள் புதுச்சேரி காக்கி தரப்பினர் தேரை இழுத்துச் செல்லவில்லை… பாதுகாப்புதான் அளித்தனர்…. என்று நகைச்சுவையாக காக்கி தரப்பின் புலம்பல் தொடர்பான வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு அதிகாரிகளை கலாய்த்து வருகின்றனர்’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

Related posts

ஒன்றிய அரசு துறையில் வேலைவாய்ப்பு

ஜம்மு-காஷ்மீரில் 4-வது முறையாக தீவிரவாதிகள் தாக்குதல்: பிரதமர் மோடி பதிலளிக்க ராகுல்காந்தி வலியுறுத்தல்

ஜூன் 13: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை