பெரியவர் இளையபெருமாளை சிறப்பிக்கும் வகையில் சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவரங்கம் அமைக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் ஒளிவிளக்காக மட்டுமல்ல; நெறிசார்ந்த அரசியலின் அடையாளமாகவும் விளங்கிய இளையபெருமாளின் நூற்றாண்டைப் போற்றும் வகையில் விதி 110-ன்கீழ் அறிவிப்பு ஒன்றை இம்மாமன்றத்தில் அறிவிப்பதை என்னுடைய கடமையாக நான் கருதுகிறேன். சமூக சீர்திருத்தத்தின் பெருமைமிகு தலைவர்களான அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, என்.சிவராஜ், எல்.சி.குருசாமி, சுவாமி சகஜானந்தர் ஆகியோர் வரிசையில் கம்பீரமாக நின்று போராடியவர்களில் ஒருவர்தான் பெரியவர் எல். இளையபெருமாள்.

ஓராண்டு காலத்திலேயே இராணுவத்தில் இருந்து விலகி மக்கள் பணியாற்ற வந்துவிடுகிறார். ஒன்றுபட்ட தென்னார்க்காடு மாவட்டம் – தஞ்சை மாவட்டத்தில் 1940 முதல் 1970 வரையில் நடந்த மிகப்பெரிய சமூகப் போராட்டங்களை நடத்தியவர் பெரியவர் இளைய பெருமாள். பட்டியலின மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட இவரது போராட்டங்கள்தான் காரணம். காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட இளைய பெருமாளுக்கு, சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் பொதுத் தேர்தலில், 1952ம் ஆண்டு, கடலூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கிறது; வெற்றியும் பெற்றார். அப்போது அவருக்கு வயது 27. டெல்லி சென்ற இளையபெருமாள், அம்பேத்கரைச் சந்திக்கிறார். ‘இவ்வளவு இளம் வயதில் நாடாளுமன்ற உறுப்பினராகி வந்திருக்கிறீர்களே? அந்த மக்களுக்காக இதுவரை என்ன செய்திருக்கிறீர்கள்?’ என்று கேட்டிருக்கிறார்.

இவர் பட்டியல் போட்டுச் சொன்னதைக் கேட்டு, அண்ணலே வியப்படைந்திருக்கிறார், இளையபெருமாளை பாராட்டி இருக்கிறார். 1980 முதல் 1984 வரை சென்னை எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகவும், அகில இந்திய தீண்டாமை ஒழிப்புக் கமிட்டித் தலைவராகவும் இருந்தவர் பெரியவர் இளையபெருமாள். அவரது பெரும் சிறப்புகளில் மிக முக்கியமானது; பட்டியலின பழங்குடி மக்களின் மேன்மைக்கான 1965 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அகில இந்திய ஆணையத்தின் தலைமைப் பொறுப்பை அவர் வகித்ததுதான். இந்த அறிக்கை வெளியே வருவதைத் தடுக்க சிலர் முயற்சித்தார்கள். அதனை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் அன்று அவரது அறையில் தாக்குதல் நடத்தினார்கள்.

இப்படி நடக்கும் என்று தெரிந்து, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் இரா. செழியனிடம் அறிக்கையின் பிரதியைக் கொடுத்து வைத்திருந்தார். அதனால் தான் அந்த அறிக்கையை அன்றையதினம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய முடிந்தது. பிற்காலத்தில் கொண்டு வரப்பட்ட வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்துக்கு அடித்தளமே பெரியவர் இளையபெருமாள் ஆணையத்தின் அறிக்கைதான். கலைஞர், 1971ம் ஆண்டு அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தார். அதற்கு எதிராக சிலர் உச்சநீதிமன்றம் போனார்கள். அப்போது கழக அரசு தாக்கல் செய்த மனுவில், ‘சமூக சீர்திருத்தத்துக்காக அமைக்கப்பட்ட இளையபெருமாள் கமிட்டி அறிக்கை அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது’ என்று குறிப்பிட்டோம். ‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் செல்லும்’ என்பதற்கு ஆதாரமாக இளையபெருமாள் ஆணைய அறிக்கையையே உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியது.

கலைஞர், பெரியவர் இளையபெருமாள் மீது மிகப்பெரிய மரியாதையை வைத்திருந்தார். சிதம்பரத்தைச் சேர்ந்தவர் என்பதால் ‘சம்மந்தி’ என்றுதான் அழைப்பார்கள். எனது பெரியம்மா பத்மாவின் ஊர் சிதம்பரம். 1980ம் ஆண்டு தேர்தலில் இந்திரா காந்தி அம்மையார், கலைஞர், பெரியவர் இளையபெருமாள் ஆகிய மூவரும் திறந்தவெளி காரில் ஊர்வலமாகச் சென்று வாக்குக் கேட்டதை தமிழ்நாடு அறியும். 1998ம் ஆண்டு அண்ணல் அம்பேத்கர் பெயரிலான தமிழ்நாடு அரசின் விருதை முதன்முதலாக பெரியவர் இளையபெருமாளுக்கு தான் முதல்வர் கலைஞர் வழங்கினார். இவர்கள் இருவருமே 1924ம் ஆண்டு பிறந்தவர்கள், அதே ஜூன் மாதம் தான் அவர்கள் பிறந்திருக்கிறார்கள். கலைஞர் பிறந்தது ஜூன் 3. இளையபெருமாள் பிறந்தது ஜூன் 26. இது மிகமிக பொருத்தமானது ஆகும்.

அத்தகைய சமூகப் போராளியைப் போற்றுவதை திராவிட மாடல் அரசு தனது கடமையாகக் கருதுகிறது. சமூக இழிவு களையப்பட வேண்டும்; சாதிய வன்முறை ஒடுக்கப்பட வேண்டும்; அனைத்து சமூகங்களின் ஒற்றுமை உருவாக்கப்பட வேண்டும்; ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சட்டரீதியான அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும்; சமத்துவ, சுயமரியாதைச் சமூகம் உருவாக்கப்பட வேண்டும் என்ற உன்னத நோக்கத்துக்காக உழைத்த பெரியவர் இளையபெருமாள் தொண்டை சிறப்பிக்கும் வகையில் கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவரங்கம் ஒன்று அமைக்கப்படும் என்பதை இந்த மாமன்றத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து அமைச்சர்கள் துரைமுருகன், எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், வெள்ளக்கோவில் சாமிநாதன், சி.வீ.கணேசன், ப.தனபால்(அதிமுக), செல்வ பெருந்தகை(காங்கிரஸ்), ஜி.கே.மணி(பாமக), நயினார் நாகேந்திரன்(பாஜ), சிந்தனை செல்வன்(விசிக), நாகை மாலி(மார்க்சிஸ்ட்), டி.ராமச்சந்திரன்(இந்திய கம்யூனிஸ்ட்), சதன்திருமலை குமார் (மதிமுக), ஜவாஹிருல்லா பூவை ஜெகன் மூர்த்தி (புரட்சி பாரதம்) ஆகியோர் பேசினர்.

Related posts

தனியார் பட்டாசு ஆலையில் சிக்கி உயிரிழந்த ராஜமாணிக்கம் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

பட்டாசு ஆலையில் சிக்கி உயிரிழந்த ராஜமாணிக்கம் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

போதைப்பொருளை தடுக்க தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறது: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!