எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக் கூடாது: தேர்தல் ஆணையத்தில் மனு

புதுடெல்லி அ.தி.மு.க அடிப்படை உறுப்பினரும், வழக்கறிஞருமான ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிசாமி ஆகியோர் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் நேற்று ஒரு கோரிக்கை மனுவை வழங்கியுள்ளனர். அதில், அதிமுக பொதுச்செயலாளர் பதவி என்பது கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியது. ஆனால் கட்சியின் அடிப்படை விதிகளில் தனக்கு சாதகமாக மாற்றி பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றுள்ளார். இது கட்சியின் சட்ட விதிகளுக்கு எதிரானதாகும்.

மேலும் ஏற்கனவே பொதுச்செயலாளர் பதவியை கடந்த 2017ல் ரத்து செய்ததை எதிர்த்தும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டதை எதிர்த்தும், கட்சியின் அடிப்படை விதிகள் மாற்றப்பட்டதை எதிர்த்தும் கடந்த 2017ல் தொடரப்பட்ட வழக்கு மற்றும் எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்க தடைகோரிய வழக்கு, அதேப்போன்று கட்சியின் உறுப்பினர் சேர்க்கையை ஆன்லைன் மூலம் மீண்டும் நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை அடிப்படையாக் கொண்டு எங்களது தரப்பின் மூலம் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

அதனால் அந்த வழக்குகள் அனைத்திலும் விசாரணை முடிவடைந்து ஒரு இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையில் அதிமுக கட்சி விதிகளில் செய்யப்பட்ட எந்தவித மாற்றத்தையும் தேர்தல் ஆணையம் ஏற்க கூடாது. அதேப்போன்று எடப்பாடி பழனிசாமியை அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராகவும் ஆணையம் அங்கீகரிக்கக் கூடாது. குறிப்பாக அதிமுக கட்சிக்கு இணையதளத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Related posts

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பான அமலாக்கத்துறை கைதுகளுக்கு உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு!!

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!!

இட ஒதுக்கீட்டை ஒழிக்கவே பிரதமர் மோடி விரும்புகிறார்: அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு பேட்டி