கொச்சி அருகே நடுக்கடலில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு ரூ.25 ஆயிரம் கோடி: கப்பலை மூழ்கடித்து தப்ப முயன்ற பாக். கும்பல்: விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

திருவனந்தபுரம்: கொச்சி அருகே நடுக்கடலில் கப்பலில் இருந்து இந்திய கடற்படை உதவியுடன் போதைப் பொருள் தடுப்புத் துறை கைப்பற்றிய போதைப் பொருளின் மதிப்பு ரூ.25 ஆயிரம் கோடி என்றும், இதைவிட அதிகமான மதிப்புள்ள போதைப் பொருட்களை கப்பலுடன் கடத்தல் கும்பல் கடலில் மூழ்கடித்ததும் தெரியவந்துள்ளது. கடந்த 3 தினங்களுக்கு முன் பாகிஸ்தானிலிருந்து ஒரு கப்பலில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக போதைப் பொருள் தடுப்புத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இந்திய கடற்படையுடன் இணைந்து நடத்திய சோதனையில் 2525 கிலோ மெத்தாபெட்டாமின் என்ற போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரையும், கைப்பற்றப்பட்ட போதைப் பொருளையும் போதைப் பொருள் தடுப்புத் துறையினர் கொச்சிக்கு கொண்டு வந்தனர். கைப்பற்றப்பட்ட போதை பொருளின் மதிப்பு ரூ.15 ஆயிரம் கோடி இருக்கும் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் கொச்சியில் நடத்திய பரிசோதனையில் அதன் மதிப்பு ரூ.25 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக வெளியாகியுள்ள மேலும் முக்கிய தகவல்கள் வருமாறு: வழக்கமாக ஆப்கானிஸ்தானில் தயாரிக்கப்படும் இந்த போதைப் பொருட்கள் அந்த நாட்டிலேயே பேக் செய்யப்பட்டு பாகிஸ்தானுக்கு கொண்டு வரப்படும். பின்னர் இங்கிருந்துதான் மற்ற நாடுகளுக்கு கடத்தப்படும். ஆனால் தற்போது கைப்பற்றப்பட்டுள்ள மெத்தாபெட்டாமின் பாகிஸ்தானிலேயே பேக் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த ஹாஜி சலீம் என்ற நெட்வொர்க் தான் பல்வேறு நாடுகளுக்கும் போதைப் பொருட்களை கடத்தி வருகிறது. தற்போது கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் பாக்கெட்டுகளில் ஹாஜி சலீம் நெட்வொர்க்கின் சின்னங்கள் காணப்படுகின்றன. மேலும் இந்தக் கும்பல் தான் இந்தியாவில் தீவிரவாத செயல்களுக்கு பெருமளவு பண உதவி செய்து வருகிறது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கை தேசிய போதைப் பொருள் தடுப்புத் துறையுடன் இணைந்து என்ஐஏவும் விசாரணை நடத்த தீர்மானித்துள்ளது.

இதற்கிடையே கைது செய்யப்பட்டுள்ள நபர் தன்னுடைய பெயரை சுபைர் என்றும் சுபாகிர் என்றும் மாற்றி மாற்றி கூறி வருகிறார். தற்போது கைப்பற்றப்பட்ட 2525 கிலோவை விட அதிகமான மெத்தாபெட்டாமின் போதைப் பொருளை இந்தக் கும்பல் கப்பலுடன் சேர்த்து கடலில் மூழ்கடித்ததும் இந்த நபரிடம் விசாரணை நடத்தியதன் மூலம் தெரியவந்துள்ளது. இந்திய அதிகாரிகள் வருவது தெரிந்தவுடன் அவர்களிடம் பிடிபடாமல் இருப்பதற்காக தங்கள் வந்த கப்பலை கடலில் மூழ்கடித்து கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் படகுகளில் தப்பினர். ஒரு படகை விரட்டிச் சென்று நடத்திய சோதனையில் தான் பாக். நபர் பிடிபட்டார். மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் இருந்து தான் இந்திய அதிகாரிகள் போதைப் பொருட்களை கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட பாக். நபர் விசாரணைக்குப் பின் நேற்று எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே மூழ்கிய கப்பலில் பெருமளவு போதைப் பொருட்கள் இருப்பதால் அதை மீட்பது குறித்து இந்திய கடற்படையுடன் சேர்ந்து போதைப் பொருள் தடுப்புத் துறையினர் ஆலோசித்து வருகின்றனர்.

Related posts

தெலுங்கானா மாநிலம் மேடக் நகரில் பாஜக பேரணியில் இருதரப்பு மோதல்

உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்வு

நீட் தேர்வு முறைகேடு: மேலும் 9 மாணவர்களுக்கு நோட்டீஸ்