போதைப்பொருள் கடத்தியவர்களின் ரூ.18 கோடி மதிப்பு சொத்துகள் முடக்கம்: கடந்த ஆண்டு 14,770 பேர் கைது; டிஜிபி சங்கர் ஜிவால் தகவல்

சென்னை: போதைப்பொருள் கடத்தியவர்களின் ₹18 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், மதுவிலக்கு மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த பேட்்டி:
போலீசார் எடுத்த தீவிர நடவடிக்கையின் எதிரொலியாக, 2022ல் 28,383 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. 14,934 பேர் கைது செய்யப்பட்டனர். இது 2019ம் ஆண்டை விட 154 மடங்கு அதிகம். 2023ல் 14,770 பேர் மீது 10,256 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. கடந்த ஜனவரியில் மட்டும் 511 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 799 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 2099 கிலோ கஞ்சா, 8038 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கஞ்சாவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டதால், போதைப் பொருள் சார்ந்த மருந்துகளை சிலர் சாப்பிட தொடங்கியுள்ளனர். இதனால், போதை மாத்திரைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2021ல் 11133, 2022ல் 63848, 2023ல் 39910 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழகம் முழுவதும் 825 முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2019ம் ஆண்டு முதல் போதைப் பொருள் குற்றவாளிகள் பட்டியலிடப்பட்டனர். அதில் 16,432 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். பாதுகாப்பு பிரமாண பத்திரங்களை மீறியதாக 2077 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் 1501 போதைப் பொருள் குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். 2022 முதல் ₹18.44 கோடி மதிப்புள்ள 47 அசையும் மற்றும் அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. 6124 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

போலீசார் எடுத்த நடவடிக்கை காரணமாக வெளி மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தல் பெருமளவில் குறைந்துள்ளது. தமிழக முதல்வர், பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரசாரங்களை அதிகரிக்க அறிவுறுத்தினார். இதனால் 74 லட்சம் மாணவர்கள் போதைப் பொருள் எதிர்ப்பு உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர். 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போதைப் பொருள் எதிர்ப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. போதைப் பொருளுக்கு எதிரான போராட்டத்தில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் தகவல் தருபவர்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு முதல்வர், எஸ்பிக்கள் முதல் காவலர்கள் வரை தனி பதக்கம் ஒன்றை அறிவத்துள்ளார். 2023ல் 6 அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது.

ரொக்கப் பரிசு வழங்குவதற்காக சுழலும் நிதியாக ₹50 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார். போதைப் பொருளுக்கு எதிரான இயக்கத்தின் முயற்சிக்காக தமிழ்நாடு காவல்துறைக்கு ஸ்காச் விருது வழங்கப்பட்டது. போதைப் பொருள் பயன்பாட்டுக்கு எதிரான புதிய முயற்சிகள் எடுப்பதில், தமிழகம் முன்னணியில் உள்ளது.

Related posts

சதுரகிரிக்கு செல்ல 4 நாட்களுக்கு அனுமதி

ஜூன் 17: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு