மாவட்ட நிர்வாகம், காவல்துறை அதிரடி நடவடிக்கையால் அம்மன் கோயிலில் முதல்முறையாக பட்டியல் சமூக மக்கள் தரிசனம்: திருவண்ணாமலை அருகே நெகிழ்ச்சி

வேட்டவலம்: வேட்டவலம் அருகே செல்லங்குப்பம் கிராமத்தில் முதல்முறையாக பட்டியல் சமூக மக்கள் மாரியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த செல்லங்குப்பம் ஊராட்சியில் பொதுப்பிரிவினர் 300 குடும்பங்களாகவும், பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள் 300 குடும்பங்களாகவும் வசித்து வருகின்றனர். இதில் அக்கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலுக்குள் பட்டியல் சமூக மக்கள் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையே சில வாரங்களுக்கு முன்பு இரு சமூகத்தைச் சேர்ந்த தனி நபர்கள் 2 பேர், கோயிலில் வழிபாடு செய்வது தொடர்பாக சமூகவலைதளங்களில் பதிவிட்டு ஒருவருக்குகொருவர் எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டனர். பின்னர் இருவரும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக வேட்டவலம் போலீசார் வழக்கு பதிந்து கடந்த மாதம் 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் இருதரப்பினரையும் அழைத்து கலெக்டர் முருகேஷ் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே மாரியம்மன் கோயிலில் சென்று வழிபட தங்களையும் அனுமதிக்க வேண்டும் எனக்கோரி கலெக்டர் மற்றும் எஸ்.பி ஆகியோரிடம் பட்டியல் சமூக மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

அதன் அடிப்படையில் நேற்று பட்டியல் சமூக மக்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்று சுவாமி தரிசனம் செய்து வைக்க மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்தனர். இதனை தொடர்ந்து வேலூர் சரக டிஜஜி முத்துசாமி தலைமையில் எஸ்.பி.க்கள் கார்த்திகேயன் (திருவண்ணாமலை), மணிவண்ணன் (வேலூர்), கிரண் ஸ்ருதி (ராணிப்போட்டை) முன்னிலையில் பலத்த போலீசார் பாதுகாப்புடன் நேற்று செல்லங்குப்பத்தை சேர்ந்த பட்டியல் இன சமூக மக்களை ஊரின் மையப்பகுதியிலுள்ள மாரியம்மன் கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து அவர்கள் முதல் முறையாக கோயிலுக்குள் சென்று பொங்கலிட்டு வழிபாடு செய்து மாரியம்மனை தரிசனம் செய்தனர். அப்போது அங்கிருந்த பக்தர்கள் சிலருக்கு அருள்வந்து சாமி ஆடினர். அம்மன் கோயிலுக்குள் சென்று வழிபட்டது மகிழ்ச்சியாக இருந்தது என்று ஊர் பொதுமக்கள் தெரிவித்தனர்.

Related posts

கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சியை ரத்து செய்யக் கோரி திமுக மனு..!!

பலாத்கார வழக்கு: கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி ஜாமின் கோரி மனு

ஜூன் 3-க்குள் ஆர்.டி.இ. மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய உத்தரவு..!!