தருமபுரம் ஆதீனத்திற்கு மிரட்டல் விவகாரம் மயிலாடுதுறை பாஜ தலைவர் அகோரம் ஜாமீன் கோரி மனு

சென்னை: மிகவும் பழமையான மயிலாடுதுறை தருமபுரம் ஆதினத்தின் 27வது தலைமை மடாதிபதியாக இருப்பவர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார். இவரின் உதவியாளர் விருதகிரி என்பவர் மயிலாடுதுறை எஸ்பிக்கு கடந்த பிப்ரவரி 21ம் தேதி ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், தலைமை மடாதிபதி தொடர்புடைய ஆபாச விடியோ மற்றும் ஆடியோ இருப்பதாக கூறி வினோத், செந்தில், விக்னேஷ் ஆகியோர் மிரட்டியுள்ளனர். அதற்கு செம்பனார்கோவிலை சேர்ந்த தனியார் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, மயிலாடுதுறை மாவட்ட பா.ஜ தலைவர் அகோரம், மதுரையை சேர்ந்த வக்கீல் ஜெயச்சந்திரன் ஆகியோர் தூண்டுதலாக இருந்தனர் என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் அகோரம் கைது செய்யப்பட்டார். அவர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி டி.வி.தமிழ் செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அகோரத்திற்கு எதிராக 47 வழக்குகள் நிலுவையில் இருப்பதால் ஜாமீன் வழங்க கூடாது என காவல்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதை பதில் மனுவாக தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தார்.

Related posts

இயற்கை அழகு!

கோடைகால மனநிலை மாற்றமும், பெண்களுக்கு வரும் வேலைப்பளுவும்… எதிர்கொள்வது எப்படி?

கோடை மழையை எதிர்கொள்வது எப்படி?