திருவண்ணாமலையில் 2வது நாளாக இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்: தரிசனத்திற்காக 5 மணிநேரம் காத்திருப்பு


திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் இன்று 2வது நாளாக லட்சக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் வந்தனர். கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் 5 மணி நேரத்திற்கு பிறகே சுவாமியை தரிசிக்கின்றனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மாதம்தோறும் பவுர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்கின்றனர். அதன்படி வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று இரவு 7.16 மணிக்கு தொடங்கி, இன்று இரவு 7.51 மணிக்கு நிறைவடைகிறது என்று அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவித்தது.

அதன்படி திருவண்ணாமலையில் நேற்று காலை முதலே பக்தர்கள் கிரிவலம் செல்லத்தொடங்கினர். நேற்று மாலை பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. விட்டு விட்டு மிதமாக பெய்த மழையை பொருட்படுத்தாமல் பக்தர்கள் தொடர்ந்து கிரிவலம் சென்றனர். இந்நிலையில் இன்று 2வது நாளாக லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். இன்றிரவு வரை பவுர்ணமி இருப்பதால் கிரிவலத்திற்கு வந்துள்ள கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டத்தால் திருவண்ணாமலை நகரமே திணறி வருகிறது. மேலும் கோயிலில் சுவாமியை தரிசிக்க பக்தர்கள் சுமார் 5 மணி நேரம் காத்திருக்கின்றனர்.

கோயிலில் நேற்றும் இன்றும் அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டது. பொதுதரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. பக்தர்கள் ராஜகோபுரம் வழியாக கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. சுவாமி தரிசனத்திற்காக கோயிலுக்கு வெளியே சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் தேரடி வீதி வரை பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள், ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டது.

Related posts

உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்வு

நீட் தேர்வு முறைகேடு: மேலும் 9 மாணவர்களுக்கு நோட்டீஸ்

ஜப்பானில் கடந்த சில நாட்களாக அரிய வகை நோய் விரைவாக பரவி வருகிறது ஜூன் 2 முதல் பாதிப்பு அதிகரிப்பு