டெல்லி முதல்வரை பதவியில் இருந்து நீக்க உத்தரவிட முடியாது.. கெஜ்ரிவால் கைது விவகாரத்தில் ஐகோர்ட் அதிரடி..!!

டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்கக் கோரிய மனுவை டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் அம்மாநில முதல்வர் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கடந்த 21ம் தேதி கைது செய்தது. இந்த கைது நடவடிக்கையை எதிர்த்தும், உடனடியாக தன்னை விடுவிக்கக் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் தலையிட டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதனிடையே நிதிமுறைகேட்டில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதால் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என சுர்ஜித் சிங் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று டெல்லி உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மன்மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் முதலமைச்சர் பதவியில் இருக்கக் கூடாது என்று தடை உள்ளதா என்று மனுதாரரிடம் பொறுப்பு தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இந்த விவகாரத்தில் நீதிமன்றம் எவ்வாறு தலையிட முடியும்? பதவியில் இருந்து நீக்குவது குறித்து துணைநிலை ஆளுநர், குடியரசுத் தலைவர் தான் இதில் முடிவு செய்ய முடியும். டெல்லியில் நிர்வாக பிரச்சனை ஏற்பட்டால் குடியரசுத் தலைவர், ஆளுநர் நடவடிக்கை எடுப்பார்கள். டெல்லியில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட முடியாது. முதலமைச்சராக கெஜ்ரிவால் தொடரும் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

Related posts

விமான நிறுவன ஊழியர்கள் போராட்டத்தால் 8 விமானங்கள் ரத்து; 25 ஊழியர்கள் பணிநீக்கம்.! ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அதிரடி

தென் சென்னை மக்களவை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் 2 கண்காணிப்பு கேமராக்கள் பழுது

தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு