மராத்தாக்கள் போராட்டம் காரணமாக அம்பாத் தாலுகாவில் ஊரடங்கு அமல்: 3 மாவட்டங்களில் இணைய சேவை துண்டிப்பு

சத்திரபதி சாம்பாஜிநகர்: மராத்தாக்களின் போராட்டம் காரணமாக ஜால்னா மாவட்டம் அம்பாத் தாலுகாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திங்கள் கிழமை நள்ளிரவு முதல் அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று ஊரடங்கை பிறப்பித்த மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்த் பஞ்சால் தெரிவித்தார். மராத்தாக்களுக்கு இட ஒதுக்கீடு கோரி அந்த சமூகத்தினர் போராடி வருகிறார்கள். ஜால்னா மாவட்டம் அம்பாத் தாலுகாவில் உள்ள அந்தர்வாலி சாரதி கிராமத்தை சேர்ந்த மனோஜ் ஜராங்கே பாட்டீல் மராத்தாக்களின் போராட்டங்களை முன்னின்று நடத்தி வருகிறார்.

இதற்காக பல முறை உண்ணாவிரத போராட்டங்கள் நடத்தினார். இதன் காரணமாக மராத்தாக்களுக்கு குன்பி சான்றிதழ் வழங்கி அதன் மூலமாக இதர பிற்பட்டோர் பிரிவில் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுத்தது. இதன்படி இதுவரை நடத்தப்பட்ட ஆய்வில் 57 லட்சம் மராத்தாக்கள் குன்பி சாதி சான்றிதழ் பெற தகுதி உடையவர்கள் என்று அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆய்வு தொடர்ந்து நடந்து வருகிறது. இதன் இடையே, இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் மராத்தாக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை இதர பிற்பட்டோர் சமூகத்தினர் கடுமையாக எதிர்த்தனர்.

இதனால் குன்பி சாதி சான்றிதழ் பெற்ற மராத்தாக்களுக்கு இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலும். இதர மராத்தாக்களுக்கு தனியாகவும் இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி மராத்தக்களுக்கு 10 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. ஆனால் ஏற்கனவே தனி இட ஒதுக்கீடு வழங்க கொண்டுவரப்பட்ட சட்டங்களை நீதிமன்றங்கள் நிராகரித்துவிட்டன. எனவே தனி இட ஒதுக்கீடு வேண்டாம். இதர பிற்பட்டோர் பிரிவில் மராத்தாக்களுக்கு இட ஓதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரும் ஜராங்கே, அதற்காக பேரணியாக மும்பை சென்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

தன்னை கொல்லை துணை முதல்வர் பட்நவிஸ் சதி செய்வதாகவும் அவர் வீட்டின் முன் போராட்டம் நடத்தப்போவதாகவும் கூறினார். தனது சொந்த ஊரான அந்தர்வாலி சாரதியில் பேட்டி அளிக்கையில் இவ்வாறு அவர் கூறினார். ஜராங்கே பேரணியாக மும்பை சென்று போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்ததை தொடர்ந்து அம்பாத் தாலுகாவில் ஊரங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திங்கள் கிழமை நள்ளிரவு முதல் அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜராங்கேயின் போராட்ட அறிவிப்பால் அதந்தார்வாலி சாரதி கிராமத்தில் பெருமதிரளாக மக்கள் கூடலாம்.

இதனால் தூலே-மும்பை நெடுஞ்சாலையிலும், அம்பாத் தாலுகாவை ஒட்டிய தாலுகாக்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படக் கூடும். இதனால் அமைதிக்கு பங்கம் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படக் கூடும் என்பதாலேயே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதாக கலெக்டர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள், தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து, பால் வினியோகம், ஊடகங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதன் இடையே ஜராங்கே, ஞாயிற்றுக்கிழமை இரவு சொந்த ஊரான அந்தர்வாலி சாரதியில் இருந்து புறப்பட்டு அருகில் உள்ள பம்பேரி கிராமத்துக்கு சென்றார். ஆனால் திங்கள் கிழமை காலை சொந்த ஊருக்கு திரும்பி வந்து மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டார். இந்த நிலையில் ஜராங்கேயை முதல் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கடுமையாக எச்சரித்துள்ளார். அரசின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என கூறிய முதல்வர், ஜராங்கே வர வர தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் பேசுவதை போல பேசுவதாகவும் முதல்வர் தெரிவித்தார்.

மராத்தாக்களின் போராட்டம் காரணமாக 3 மாவட்டங்களில் இணைய தள சேவையை மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது. நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இணைய தள சேவைகள், ஜால்னா, பீட் மற்றும் சத்தரபதி சம்பாஜி நகர் மாவட்டங்களில் இந்த சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வதந்திகள் மூலம் விரும்பத் தகாத சம்பவங்கள் நடப்பதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

இந்த மூன்று மாவட்டங்களின் எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. அனுமதி இல்லாமல் ஆர்ப்பட்டம் செய்ததாக பீட் மாவட்டத்தில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பஸ்களை சேதப்படுத்தியதாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டதாகவும் ஒரு அதிகாரி கூறினார்.

* உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார் மனோஜ் ஜராங்கே
மராத்தா இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி 17 நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மனோஜ் ஜராங்கே பாட்டீல், உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெறுவதாக நேற்று அறிவித்தார். பின்னர் அவர் கூறுகையில், உடல் நிலை கருதி நான் ஓரிரு நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற உள்ளேன். அதன்பிறகு எனது கிராமத்துக்குச் சென்று மராத்தா இனத்தவர்களை சந்தித்து பேச இருக்கிறேன். உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டாலும், இடஒதுக்கீடு கோரும் போராட்டம் தொடரும் என்றார்.

Related posts

இறுக்கமான முகத்தோடு சொந்த ஊர் வந்து சேர்ந்த இலைத்தலைவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சொல்லிட்டாங்க…

அசாமில் மழையால் 3.5லட்சம் பேர் பாதிப்பு