ஓய்வு குறித்து முடிவு செய்ய இன்னும் 8-9 மாதம் உள்ளது: சிஎஸ்கே கேப்டன் டோனி பேட்டி

சென்னை: ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்றிரவு நடந்த இறுதிபோட்டிக்கான குவாலிபயர் 1 ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் மோதின. டாஸ் வென்ற குஜராத் பநதுவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே 20 ஓவரில், 7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன் எடுத்தது. அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 44 பந்தில் 7பவுண்டரி,ஒருசிக்சருடன் 60, டெவோன் கான்வே 40(34பந்து),ஜடேஜா 22, ரகானே, ராயுடு தலா 17 ரன் எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய குஜராத் அணியில் சுப்மான்கில் 42, ரஷித்கான் 30 , தசுன் ஷனகா 17 ரன் எடுக்க மற்ற அனைவரும் சொற்ப ரன்னில் அவுட் ஆகினர். 20 ஓவரில் அந்த அணி 157 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது.

இதன் மூலம் 15 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற சிஎஸ்கே இறுதிபோட்டிக்கு முன்னேறியது. சிஎஸ்கே பவுலிங்கில் தீபக் சாகர், ஜடேஜா, பதிரானா, தீக்ஷனா தலா 2விக்கெட் வீழ்த்தினர். ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டநாயகன் விருது பெற்றார். 4முறை சாம்பியனான சிஎஸ்கே 10வதுமுறையாக இறுதிபோட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. குஜராத் அணி தோற்றாலும் இன்னொரு வாய்ப்பு உள்ளது. இன்று நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் வெற்றிபெறும்அணியுடன் அகமதாபாத்தில், குவாலிபயர் 2 போட்டியில் குஜராத் மோதும்.இதில் வெற்றிபெறும்அணி 28ம்தேதி பைனலில் சிஎஸ்கேவுடன் பலப்பரீட்சை நடத்தும். வெற்றிக்கு பின் சிஎஸ்கே கேப்டன் டோனி அளித்தபேட்டி: “ஐபிஎல் மிகப்பெரிய தொடராக மாறி வருகிறது.

கிட்டத்தட்ட 2 மாத போராட்டங்களுக்குப் பிறகு பைனலுக்குள் வந்திருக்கிறோம். மற்ற சீசன்களில் 8 அணிகளுக்கு பழக்கப்பட்டுவிட்டோம். இம்முறை 10 அணி விளையாடுகிறது. ஆகையால் மற்ற பைனல் போல் இதை எடுத்துக்கொள்ள முடியாது. இருப்பினும் 10வது முறையாக வந்திருக்கிறோம். இவை அனைத்திற்கும் அணியில் உள்ள அத்தனை வீரர்களும் கொடுத்த பங்களிப்பு தான் முக்கிய காரணம். குஜராத் மிகச்சிறந்த அணி. அவர்கள் எந்த ஸ்கோரையும் சேஸ் செய்யக்கூடியவர்கள். ஆகையால் அவர்களை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று திட்டமிட்டோம். இன்று டாசை இழந்ததும் எங்களுக்கு சாதகமாகத்தான் அமைந்துவிட்டது. ஜடேஜாவிற்கு குறிப்பிட்ட பிட்ச் நன்றாக ஈடுபட்டு விட்டால் அவரை அடிப்பது முற்றிலும் கடினம்.

அதேபோல் பேட்டிங்கில் மொயின் அலியுடன் சேர்ந்து அவர் அமைத்த பார்ட்னர்ஷிப்பை மறந்துவிடக்கூடாது. சிஎஸ்கே அணியை பொறுத்தவரை, வீரர்களுக்கு ஏற்ற சூழல் அமைத்துக் கொடுக்கிறோம். அதேபோல் அவர்களுக்கு என்ன எடுபடும் என்பதை கவனித்து அதற்கேற்றவாறு விளையாட வைக்கிறோம். குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கூடுதல் நம்பிக்கையை கொடுத்து வருகிறோம். இந்த பிட்ச் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து தொடர்ந்து பீல்டிங்கை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். நான் மைதானத்தில் சற்று எரிச்சல் ஊட்டக்கூடிய கேப்டனாக இருக்கிறேன் என நினைக்கிறேன். ஏனெனில் பீல்டிங்கில் வீரர்கள் 2-3 அடிகள் சற்று தள்ளிநின்றாலும் நான் வீரர்களிடம் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறேன்.

அவர்களை மாற்றிக்கொண்டே இருக்கிறேன். பீல்டிங்கில் நான் வீரர்களிடம் சொல்வது ஒன்று மட்டும்தான், ‘நீங்கள் கேட்ச்சை தவறவிட்டாலும், பந்தை தவறவிட்டாலும் உடனடியாக என்னை பாருங்கள். என் மீது ஒரு கண் வைத்துக்கொள்ளுங்கள்.’ என்பேன். அதற்காக அவர்களை நான் ஒன்றும் திட்டப்போவதில்லை, என்றார். ஓய்வு குறித்த கேள்விற்கு பதில் அளித்த டோனி, “ஓய்வு குறித்து முடிவு செய்ய இன்னும் 8-9 மாதம் இருக்கிறது. ஐபிஎல் மினி ஏலம் டிசம்பரில் தான் நடைபெற உள்ளது. அதன்பிறகு ஓய்வு குறித்து முடிவு செய்து கொள்ளலாம். எதற்காக இப்போதே தேவையற்ற தலைவலியை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். களத்தில் விளையாடினாலும், வெளியே இருந்தாலும் நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டுமே இருப்பேன்” என்று தெரிவித்தார்.

பைனலில் மீண்டும் டோனியை சந்திக்க விரும்புகிறேன்: ஹர்திக் பாண்டியா பேட்டி
தோல்வி குறித்து குஜராத் கேப்டன் ஹர்திக்பாண்டியா கூறியதாவது: பவுலிங்கில் நாங்கள் சில தவறுகள் செய்துவிட்டோம். 15 ரன் கூடுதலாக வழங்கியதே தோல்விக்கு காரணமாகவும் அமைந்துவிட்டது. இறுதி போட்டிக்கு தகுதி பெறுவதற்கு எங்களுக்கு மற்றொரு வாய்ப்பும் இருப்பதால் நிச்சயம் தவறுகளை திருத்தி கொண்டு அடுத்த போட்டியை சந்திப்போம். பந்துவீச்சாளர்களை சரியாக பயன்படுத்துவதில் டோனிக்கு நிகர் அவர் தான், அவரை போன்று பந்துவீச்சாளர்களை சரியாக பயன்படுத்துவது கடினம். டோனி அடிக்கடி பந்துவீச்சாளர்களை மாற்றி கொண்டே இருந்தார், நாங்களும் விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்தோம். நிச்சயமாக இந்த தோல்விக்கு டோனியும் முக்கிய காரணம் தான். இறுதி போட்டியில் மீண்டும் அவரை சந்திக்க விரும்புகிறேன்” என்றார்.

பிட்ஸ்.. பிட்ஸ்..
* ஐபிஎல்லில் சிஎஸ்கே நேற்று முதன்முறையாக குஜராத்தை வீழ்த்தியது. இதற்கு முன் ஆடிய 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
* சிஎஸ்கே 10வது முறையாக பைனலுக்குள் நுழைந்துள்ளது. மும்பை 6, கேகேஆர்,ஆர்சிபி தலா 3 முறை பைனலுக்குள் நுழைந்துள்ளன.
* ஒரு சீசனில் 700 பிளஸ் ரன் எடுத்த 2வது இந்திய வீரர் என்ற சிறப்பை சுப்மான்கில் பெற்றுள்ளார். இதற்கு முன் விராட் கோஹ்லி 2016ல்700 பிளஸ் ரன் எடுத்துள்ளார்.
* டோனி 10வது முறையாக ஐபிஎல் பைனலில் ஆட உள்ளார். ரோகித்சர்மா5 முறை பைனலில் ஆடி 2வது இடத்தில் உள்ளனர்.
* குஜராத் சேசிங்கில் நேற்று 4வது தோல்வியை சந்தித்தது. மொத்தம் சேசிங்கில் 18போட்டியில் 14ல் அந்த அணி வெற்றுள்ளது.

Related posts

காங். வேட்பாளர் வாபஸ்; இந்தூர் மக்களவை தொகுதியில் வாக்குப்பதிவு 7.5சதவீதம் குறைவு

பூஞ்ச் தீவிரவாத தாக்குதல் பற்றி கருத்து; முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் மீது நடவடிக்கை: தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை

பணமோசடி வழக்கு ஜார்க்கண்ட் அமைச்சரிடம் ஈடி விசாரணை