கச்சா எண்ணெய் விலை குறைவு பெட்ரோலிய விலையை குறைக்க பரிசீலிப்போம்: ஒன்றிய அமைச்சர் அறிவிப்பு

புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது தொடர்பாக பரிசீலிப்போம் என்று ஒன்றிய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.
பெட்ரோல், டீசல் விலை இந்தியாவில் தொடர்ந்து ஓராண்டுக்கும் மேலாக மாறாமல் உள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. தற்போது பெட்ரோலிய நிறுவனங்கள் இழப்பீடு சரிசெய்யப்பட்டு விட்டதால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதுபற்றி பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி கூறியதாவது: கடந்த காலாண்டில் எண்ணெய் நிறுவனங்கள் இழப்பீடு சரி செய்யப்பட்டுள்ளது. எனவே விலை குறைப்பு விஷயத்தில் என்ன செய்யலாம் என்று பரிசீலிக்கப்படும். இருப்பினும் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிடும் நிலையில் நான் இல்லை. ஆனாலும் நுகர்வோர் எந்த சிரமத்தையும் அனுபவிக்காமல் இருப்பதை அரசு உறுதி செய்யும்.

எதிர்க்கட்சிகள் இலவச அரசியல் நடத்துகிறார்கள். அதிலும் ஒருவர் எல்லாவற்றையும் இலவசமாக கொடுக்க விரும்புகிறார். இதன் மூலம் அவர்கள் இலவச அரசியலின் ஆபத்தான பகுதிக்குள் நுழைகிறார்கள். ஏனெனில் விலை நிர்ணயம் என்பது ஒரு முக்கியமான விஷயம். மக்களுக்கு உதவ அரசு தனது ஒன்பது ஆண்டு காலத்தில் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பா.ஜ அரசுகளைத்தவிர மற்ற மாநில அரசுகள் வாட் வரியை குறைக்காததால் பெட்ரோல், டீசலை அதிக விலைக்கு விற்றாலும் பெட்ரோலியம் விலை குறித்து அதிகம் குரல் கொடுப்பது பாஜ அல்லாத மாநில அரசுகள்தான். அரசு எப்போதும் பிறரைக் குறை கூறுவதற்கு பின்புறக் கண்ணாடியைப் பார்க்கிறது என்கிறார் ராகுல். முதலில் அவரது கண்பார்வை சரிபார்க்கப்பட வேண்டும். அவர் தவறான கண்ணாடி அணிந்திருக்கலாம். ஆனால் பிரதமர் மோடி நாட்டை முன்னணியில் இருந்து வழிநடத்துகிறார்.இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

அதிக கொழுப்பு, சர்க்கரை, உப்பு சேர்த்து வீட்டில் தயாரிக்கும் உணவும் ஆபத்துதான்..!ஐசிஎம்ஆர் ஆய்வு தகவல்

இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பழைய கட்டிடத்தை காட்டி புதிய கட்டிடம் கட்டியதாக ரூ.35.68 லட்சம் மோசடி தி.நகர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு