உடல் தகனம் நடந்தது: டேனியல் பாலாஜியின் கண்கள் தானம்

சென்னை: பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி (48), நேற்று முன்தினம் இரவு மாரடைப்பு காரணமாக திடீரென்று மரணம் அடைந்தார். இச்செய்தி திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்தது. டி.வி தொடரில் நடித்த பின்பு, ‘ஏப்ரல் மாதத்தில்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான டேனியல் பாலாஜி, கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘காக்க காக்க’ படத்தில், போலீஸ் கேரக்டரில் வித்தியாசமான பாடிலாங்குவேஜுடன் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதையடுத்து கமல்ஹாசன் நடித்த ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானார்.

தொடர்ந்து ‘காதல் கொண்டேன்’, ‘பொல்லாதவன்’, ‘வை ராஜா வை’, ‘அச்சம் என்பது மடமையடா’, ‘பைரவா’, ‘வட சென்னை’, ‘பிகில்’ உள்பட பல படங்களில் நடித்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 45 படங்களுக்கு மேல் வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ள டேனியல் பாலாஜி திருவான்மியூரில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் இருந்தபோது நெஞ்சு வலிப்பதாக சொன்னார். உடனே அவரை கொட்டிவாக்கம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது டேனியல் பாலாஜிக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

பாலாஜி என்ற அவர், ‘சித்தி’ டி.வி தொடரில் டேனியல் என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானதும் டேனியல் பாலாஜி ஆனார். நடிப்பு தவிர ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்ட டேனியல் பாலாஜி, ஆவடியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தைக் கட்டினார். அவரது அம்மாவும், மறைந்த நடிகர் முரளியின் அம்மாவும் சகோதரிகள். நாஞ்சில் பி.சி.அன்பழகன் இயக்கத்தில் முரளி, லைலா நடிப்பில் வெளியான ‘காமராசு’ என்ற படத்தில் டேனியல் பாலாஜி உதவி இயக்குனராகப் பணியாற்றியுள்ளார். நேற்று மாலை புரசைவாக்கம் வீட்டில் இருந்து டேனியல் பாலாஜியின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, ஓட்டேரி மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. ஏற்கனவே அவர் தனது கண்களை தானம் செய்ய உறுதிமொழி அளித்திருந்ததால், நேற்று முன்தினம் அவரது வீட்டுக்குச் சென்ற மருத்துவர்கள், டேனியல் பாலாஜியின் கண்களை தானமாகப் பெற்றுக்கொண்டனர்.

Related posts

சென்னை விமான நிலையத்தில் குண்டு வெடிக்கும் என்று இ-மெயில் மூலம் மிரட்டல் வந்ததால் பரபரப்பு

விரைவில் பயன்பாட்டுக்கு வரும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள்!

கோவையில் காட்டு யானை தாக்கி இளைஞர் காயம்