கழிமுகத்தில் களிநண்டு வளர்ப்பு

கடல் மீன்களைப் போல கடல் நண்டுகளும் உலகம் முழுக்க பலதரப்பினரால் விரும்பி உண்ணப்படுகிறது. கடலின் கழிமுகப்பகுதியில் வளர்க்கப்படும் களிநண்டுக்கும் அசைவப்பிரியர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த வகை நண்டுகளை வணிக ரீதியாக வளர்க்கும் முறை குறித்து விரிவாக விளக்குகிறார் தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் உதவி பேராசிரியர் விஜய் அமிர்தராஜ்.உலகளவில் சுமார் 2000க்கும் மேற்பட்ட நண்டு வகைகள் உள்ளன. ஆனால் சுமார் 50 வகையான நண்டுகள் மட்டுமே உணவாக உட்கொள்ளப்படுகின்றன. அவற்றில் ஒரு சில வகைகளுக்கு மட்டுமே வளர்ப்புத் தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது. நண்டின் மாமிசத்தில் முக்கியமான உயிர்சத்துக்களும், மனித உடல் நலத்துக்குத் தேவையான சாம்பல் சத்து, சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, அயோடின் ஆகியனவும் அடங்கியுள்ளன. களிநண்டுகள் நீருக்கு வெளியே ஏறத்தாழ 70 மணி நேரம் ஈரப்பதத்திலேயே உயிருடன் இருக்கும் திறனுடையவை. இதனால் அவை உயிருடன் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதுதவிர பதப்படுத்தப்பட்ட நிலையிலும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

2004 – 2005ம் ஆண்டில் இந்தியாவின் நண்டு ஏற்றுமதி (உயிருடன்) 1757.66 டன் ஆகும். இதன் மதிப்பு ரூ.34.58 கோடியாகும். இந்தியாவிலிருந்து, குறிப்பாக ஹாங்காங், சிங்கப்பூர். மலேசியா, ஜப்பான், தாய்லாந்து, அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.நண்டுகளில் முக்கிய இனமாக கருதப்படும் களி நண்டுகளை பொரிப்பகங்களில் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் அண்மையில் செம்மைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், களி நண்டு வளர்ப்பினை வணிகரீதியாக இந்தியாவில் பெருமளவில் மேற்கொள்வதற்கான வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன.

களிநண்டு – ஆதாரவளம்

உலகில் களிநண்டுகள் ஆசிய நாடுகளில் அதிக அளவில் காணப்படுகின்றன. குறிப்பாக வங்கதேசம், இந்தோனேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தியா, இலங்கை, மலேசியா, தைவான் ஆகிய நாடுகளில் பரவி காணப்படுகின்றன. இவ்வகை நண்டுகள் பொதுவாக அண்மைக் கடல் பகுதிகளிலும், சதுப்பு நிலப் பகுதிகளிலும், அலையாத்தி வனங்களிலும், கழிமுகப் பகுதிகளிலும் வாழ்பவை. இந்தியாவில் குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, மேற்கு வங்காளம், ஒரிஸா, கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு, பாண்டிச்சேரி ஆகிய கடலோரப் பகுதிகளில் இவை பரவி காணப்படுகின்றன.தமிழகத்தில் பழவேற்காடு, எண்ணூர், அடையாறு, கிள்ளை, பரங்கிப்பேட்டை, மரவக்காடு, முத்துப்பேட்டை, அதிராமப்பட்டினம், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், மண்டபம், இராமேஸ்வரம், தூத்துக்குடி மற்றும் புன்னக்காயல் ஆகிய கடலோரப் பகுதிகளில் களிநண்டுகள் அதிகமாக காணப்படுகின்றன. இந்தியாவில் மொத்த நண்டு உற்பத்தி 36,870 டன்னாகவும், அவற்றில் தமிழ்நாட்டின் பங்கு 22,450 டன்னாகவும் கணக்கிடப்பட்டுள்ளன. களிநண்டுகள் எடைக்கு தகுந்தவாறு ஒரு கிலோ ரூ.180 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது.

களிநண்டு – வளர்ப்பு முறைகள்

களிநண்டு வளர்ப்பினை இருவிதமாக மேற்கொள்ளலாம். முதலாவதாக நண்டு பொரிப்பகத்தில் இருந்து இளம் குஞ்சுகளைக் கொண்டு வந்து விற்பனைக்கு ஏற்ற எடை வரும் வரை வளர்ப்பதாகும். அடுத்ததாக, மெது நண்டுகளை, குறிப்பிட்ட காலம் வளர்த்து அதன் ஓடுகள் கடினமாகும் வரை வளர்ப்பதாகும். அதாவது களி நண்டுகள் வளர்ச்சியடையும் பொழுது தனது மேல் ஓட்டினை உரிக்கும் இடைப்பட்ட காலம் குறைவாகவும், வளர்ச்சியடைந்த நண்டுகளில் இந்தக் கால அளவு அதிகமாகவும் இருக்கும். இவ்வாறு மேல் ஓட்டினை உரித்த நண்டுகள், மெது நண்டுகள் எனப்படுகின்றன. மெது நண்டுகளை தோலுரித்த நாள் முதல் ஒன்று அல்லது ஒன்றரை மாதங்களில் கடின ஓடுடைய நண்டுகளாக வளர்க்க இயலும். இம்முறை பொதுவாக நண்டு சதைபற்றேற்றுதல் அல்லது நண்டு கொழுப்பேற்றுதல் என அழைக்கப்படும். நண்டுகளின் வளர்ப்பு முறைகளைக் குளங்களில் நண்டு வளர்ப்பு, மிதவைக் கூடுகளில் நண்டு வளர்ப்பு, வலை அடைப்புகளில் நண்டுவளர்ப்பு என வகைப்படுத்தலாம். அதிலும் ஓரின வளர்ப்பு, கூட்டின வளர்ப்பு என வகைப்படுத்தலாம்.

மிதவைக் கூண்டுகளில் நண்டு வளர்ப்பு 1 மீX 1மீX 30 செ.மீ அளவுள்ள சுண்ணாம்புக் கண்ணாடி நார் இழைக் கூடில், 9 பகுதிகள் கொண்ட சிறு சிறு அறைகளாக அமைக்க வேண்டும். அறைகளின் பக்கவாட்டுப் பகுதிகளிலும், மேற்பகுதியிலும் 1 அங்குலம் (2 1/2 முதல் 3 செ.மீ அளவுக்கு) துவாரம் இருக்க வேண்டும். கூண்டின் அடிப்பகுதியில் துவாரம் தேவையில்லை. ஒவ்வொரு சிறு சிறு பெட்டியிலும் மெல்லிய ஓடுடைய நண்டுகளை ஒரு செ.மீக்கு 9 நண்டுகள் என்ற வீதத்தில் இருப்பு செய்ய வேண்டும். இவ்வாறாக சுமார் 750 கிராம் எடையுள்ள மெல்லிய ஓடுடைய நண்டுகளை இருப்பு செய்து தினமும் உடல் எடையில் இயற்கை உணவு (மட்டி, மீன் உணவு) கொடுத்து வளர்த்தால், 25 நாட்களில் சுமார் 825 கிராம் எடை கொண்ட கடினமான ஓடுடைய நண்டுகளை அறுவடை செய்யலாம்.

வலை அடைப்புகளில்
நண்டு வளர்ப்பு

இவ்வகை வளர்ப்பிற்கு கழிமுகப் பகுதிகள், கழிமுக சிறு ஓடைகள், அலையாத்தி வனப்பகுதிகள், அண்மைக் கடல் பகுதிகளில் கடல் நீர் ஏற்ற – வற்றம் அதிகமுள்ள இடங்களைத் தேர்வு செய்தல் உகந்தது. இப்பகுதிகளில் நீரின் ஆழமானது குறைந்தபட்சம் 2 முதல் 3 அடி உயரம் இருத்தல் அவசியம். இவ்வாறு தேர்வு செய்த இடத்தில் மூங்கிலை நட்டு நைலான் வலைகள் கொண்டு வலை அடைப்புகள் அமைத்து, ஒரு சதுர மீட்டருக்கு ஒரு நண்டு வீதம் இருப்பு செய்து வளர்க்கலாம். இவ்வாறு வலை அடைப்புகளில் வளரும் நண்டுகள் 6 மாதங்களில் சுமார் 500 முதல் 750 கிராம் வரை வளர்ச்சி அடையும்.

குளங்களில் நண்டு வளர்ப்பு

இது ஒரு பாரம்பரிய வளர்ப்பு முறையாகும். இவ்வகை வளர்ப்பில் நண்டுகள் தனியாகவும் மடவை, கறிமீன், பால்மீன், இறால் போன்ற இதர வகை மீன்களுடன் சேர்த்தும் ஒரே குளத்தில் இருப்பு செய்து வளர்க்கப்படுகின்றன. நண்டுகளைத் தனி இனமாக வளர்க்கும் பட்சத்தில், ஒரு ஹெக்டேருக்கு 20,000 முதல் 50,000 வரை இளம் நண்டுகள் (150 கிராம்) இருப்பு செய்து வளர்த்தால் 4 முதல் 6 மாதங்களில் 2 முதல் 3 டன் வரை வளர்ந்த
நண்டுகளை அறுவடை செய்யலாம்.

இடம் தேர்வு செய்தல்

களிநண்டு வளர்ப்புக்கு தேர்வு செய்யும் இடம் களிமண் நிறைந்ததாக இருக்க வேண்டும். களிமண் பூமியானது, நண்டுகள் ஓடுகளை கழற்றும்போது வளைகளை அமைத்து பாதுகாப்பாக மறைந்து கொள்வதற்கும், குளத்தில் நிரப்பிய நீர் குளத்தின் அடித்தளம் மற்றும் பக்கவாட்டில் கசிந்து வீணாகாமல் இருப்பதற்கும் உதவுகிறது.

குளம் தயாரித்தல்

நண்டு வளர்க்க தேர்வு செய்யப்பட்ட இடத்தில் 0.5 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட 1.0 மீ முதல் 1.5 மீவரை ஆழமுடைய நீள் சதுரமான குளம் அமைக்க வேண்டும். குளத்தின் உள்கரையை ஒட்டி 2 முதல் 3 மீட்டர் தூரத்திற்கு, செவ்வக வடிவ வாய்க்கால் அமைத்தல் வேண்டும். இவ்வாறு குளத்தினை அமைப்பது, நண்டுகள் வெயில் நேரத்தில் ஆழமுள்ள பகுதிகளிலும் மற்ற நேரங்களில் ஆழம் குறைந்த பகுதிகளிலும் இடம் பெயருவதற்கு உதவும். மேலும், நண்டுகளுக்கு உணவிடவும் எளிதாக இருக்கும். குளத்தின் நடுவே ஆங்காங்கே அலையாத்தி தாவரங்களான அவிசீனியா, ரைசோபோரா போன்றவற்றை நட்டு வளர்த்தல் நண்டுகளுக்கு மறைவிடங்களாக அமையும்.
குளத்தின் கரையோரமாக நண்டுகள் வளை தோண்டுவதைக் தடுக்க அவை வசிப்பதற்கேற்ற மறைவிடங்களைக் குளத்தில் அமைத்து தருவது அவசியம். குளத்திலிருந்து நண்டுகள் வெளியேறாமல் இருக்க கரையைச் சுற்றி சவுக்குக் கம்புகளை நட்டு 50-80 செ,மீ உயரத்திற்கு வலைகளைத் தரையில் நன்கு பதிந்தபடி இருக்குமாறு இறுக்கமாகக் கட்டி வேலி அமைக்க வேண்டும். நண்டு வளர்ப்புக் குளம் தயாரான பிறகு கடல் நீரை நிரப்பி உரமிட்டு போதுமான நுண்ணுயிர் வளர்ச்சியடைந்தவுடன் இளம் நண்டுகளை சதுர மீட்டருக்கு 1-3 என்ற அளவில் 15 நாட்களுக்குள் இருப்பு செய்ய வேண்டும்.

நண்டுகள் இருப்பு செய்தல்

வளர்ப்புக்குளம் தயார் செய்த பின் வெப்பம் குறைந்த அதிகாலை அல்லது மாலை வேளையில் குளத்திலுள்ள நீரின் வெப்பம் மற்றும் உப்புத்தன்மை ஆகியவற்றிற்கு இணக்கமான சூழ்நிலைக்கு நண்டுகளைக் கொண்டு வந்த பின் இருப்பு செய்ய வேண்டும்.16-20 கிராம் எடையுள்ள நண்டுக் குஞ்சுகளை சதுர மீட்டருக்கு ஒன்று (ஹெக்டேருக்கு 10,000 எண்கள்) என்ற அளவில் இருப்பு செய்ய வேண்டும். கூட்டின வளர்ப்பாக மீன்களும் சேர்த்து இருப்பு செய்யும் பட்சத்தில், ஒரு ஹெக்டேருக்கு 1000 என்ற அளவில் பால்கெண்டை மீன்களையும் இருப்பு செய்ய வேண்டும்.

உணவிடுதல் மற்றும் நீரின் தர மேலாண்மை

வளர்ப்பு நண்டுகளுக்கு நாள் ஒன்றிற்கு காலை, மாலை என இரு வேளைகளிலும் அதன் எடையில் 5 விழுக்காடு என்ற விகிதத்தில் வேக வைத்த மீன் கழிவுகள், மட்டிகள் ஆகியவற்றை உணவாக இட வேண்டும். நண்டுகளுக்கு மாமிச உணவு இடுவதால் நீரின் தரம் கெட்டுப் போக வாய்ப்புள்ளது. எனவே நண்டு வளர்ப்புக்கான தண்ணீரின் தரம் குறிப்பிட்டவாறு இருத்தல் அவசியம். வெப்பம் 23 – 32 செ.கி, உப்புத் தன்மை 10 – 35 பி.பி.டி, பிராணவாயு 4.0 பி.பி.எம்-க்கு மேல் இருத்தல் அவசியம். கார அமிலத் தன்மை 8.0 – 8.5, நீரின் அளவு 80 – 100 செ.மீ, ஹைடிரஜன் சல்பைடு 0, ஒளி ஊடுருவும் திறன் 30-40 செ.மீ என இருக்க வேண்டும்.

அறுவடை செய்தல்

நண்டுக் குஞ்சுகள் இருப்பு செய்த நாளிலிருந்து 6 முதல் 8 மாதங்களில் நல்ல வளர்ச்சி பெற்று அறுவடைக்கு தயாராகிவிடும். வேகமாக வளர்ச்சி பெற்ற நண்டுகளை அவ்வப்போது அறுவடை செய்ய வேண்டும். அதாவது 500 – 750 கிராம் அளவிற்கு வளர்ந்த நண்டுகளை முதலில் அறுவடை செய்ய வேண்டும்.முழு அறுவடையை மேற்கொள்ளும் பொழுது, நீர் இறைக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தி குளத்து நீர் முழுவதையும் வெளியேற்ற வேண்டும்.அறுவடை செய்த நண்டுகளை நல்ல தண்ணீரில் அலசி சுத்தப்படுத்தி கூடைகளில் வைத்து நிழலில் பாதுகாப்பாக சேமிக்க வேண்டும்.கூட்டின வளர்ப்பு முறையில் நண்டுகளை வளர்ப்பதன் மூலம் ஹெக்டேருக்கு 3 டன் எடையுள்ள நண்டுகளையும் 750 கிலோ எடையுள்ள பால் கெண்டை மீன்களையும், அறுவடை செய்து ரூ.1.42 இலட்சம் வரை நிகர வருமானம் ஈட்டலாம். வெளிநாட்டு சந்தையில் விற்பனை வாய்ப்பு அதிகம் கொண்ட இக்களிநண்டுகளை வளர்த்து தொழில் முனைவோர் மற்றும் சுயதொழில் செய்வோர் அதிக லாபம் ஈட்டிட முடியும்.

தொடர்புக்கு:
முனைவர் விஜய் அமிர்தராஜ்,
உதவி பேராசிரியர் மற்றும் தலைவர் (பொறுப்பு), மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி
நிலையம், தூத்துக்குடி. 99944 50248.

Related posts

நொய்டாவில் ஆன்லைனில் வாங்கிய அமுல் ஐஸ்கிரீமில் பூரான்

தென்காசி மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 விபத்துகளில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு

தெலுங்கானா மாநிலம் மேடக் நகரில் பாஜக பேரணியில் இருதரப்பு மோதல்