கோழிக்கோடு விமான நிலையத்தில் ரூ1.15 கோடி தங்கம் கடத்திய தம்பதி கைது

திருவனந்தபுரம்: துபாயில் இருந்து கோழிக்கோடு வந்த விமானத்தில் ரூ1.15 கோடி தங்கம் கடத்திய கணவன், மனைவியை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர். துபாயில் இருந்து கோழிக்கோட்டுக்கு நேற்று இரவு தனியார் விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்க இலாகா அதிகாரிகள் வழக்கமான பரிசோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோழிக்கோடு கொடுவள்ளி பகுதியை சேர்ந்த ஷமீனா (36) என்ற பெண் பயணியின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் கொண்டு வந்திருந்த பேக்கை அதிகாரிகள் பரிசோதித்தனர். ஆனால் எதுவும் சிக்கவில்லை.

இதையடுத்து அவரை அதிகாரிகள் தனி அறைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்து பார்த்தனர். அப்போது உள்ளாடைக்குள் 1198 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஷமீனாவுடன் அவரது கணவர் சரபுதீன் மற்றும் குழந்தைகளும் வந்திருந்தனர். சந்தேகத்தின் பேரில் சரபுதீனிடமும் சோதனை நடத்தினர். அப்போது அவர் 950 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.

கணவன், மனைவி 2 பேரும் சேர்ந்து மொத்தம் 2148 கிராம் தங்கத்தை கடத்தினர். இதன் மதிப்பு ரூ1.15 கோடி ஆகும். வழக்கமாக குடும்பமாக வருபவர்களிடம் சுங்க இலாகா அதிகாரிகள் அதிகமாக பரிசோதனை செய்வது கிடையாது. இந்த சலுகையை பயன்படுத்தி இவர்கள் தங்கத்தை கடத்தியுள்ளனர்.

Related posts

பைக்கில் சென்றபோது காதலி தீக்குளிப்பு காதலன் சாவு

நுகர்வோர் பாதுகாப்பு சட்ட வரம்பிற்குள் வரமாட்டார்கள் வக்கீல்கள் மீது சேவை குறைபாடு வழக்கு தொடர முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

விசாரணை முடிந்து யூடியூபர் சங்கர் மீண்டும் சிறையில் அடைப்பு; ஜாமீன் மனு ஒத்திவைப்பு