திருப்பதியில் ஜன சைதன்ய வேதிகா சார்பில் ஆலோசனை போலாவரம் திட்டத்தை நிறைவேற்றினால் ஆந்திராவின் தண்ணீர் பிரச்னை தீரும்

*முன்னாள் எம்எல்ஏ பேச்சு

திருப்பதி : திருப்பதியில் ஜன சைதன்ய வேதிகா கமிட்டி சார்பில் நடந்த ஆலோசனைகூட்டத்தில் போலாவரம் திட்டத்தை நிறைவேற்றினால் ஆந்திராவின் தண்ணீர் பிரச்னை தீரும் என முன்னாள் எம்எல்ஏ பேசினார். திருப்பதியில் உள்ள வேமன்னா அறிவியல் மையத்தில் ஜன சைதன்ய வேதிகா ஆந்திர பிரதேச கமிட்டி சார்பில் ராயலசீமா வளர்ச்சியை பாதிக்கும் பிரச்னைகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாநிலத் தலைவர் லட்சுமணன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதில், சிறப்பு விருந்தினராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கபூர், காங்கிரஸ் கட்சியின் ஊடக குழு மாநில தலைவர் துளசி, பல்வேறு கட்சிகள் சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ கபூர் பேசியதாவது: மத்திய, மாநில அரசுகள் ராயல சீமா பகுதி வளர்ச்சிக்காக கொடுத்த வாக்குறுதிகளை அமல்படுத்தாததால் ராயலசீமா பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய உருக்கு ஆணையத்தின் தலைமையில் கடப்பா உருக்கு அமைப்பதாக உறுதி அளித்தனர்.
இதுவரை அமைக்கவில்லை. கர்னூல் பகுதியில் உயர்நீதிமன்றத்தை அமைக்க இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

மாநிலம் முழுவதும் 18 லட்சம் மோட்டார் கிணறுகள் உள்ளன. ராயலசீமாவில் மட்டும் 12 லட்சம் மோட்டார் கிணறுகள் உள்ளன. ராயலசீமா விரிவான வளர்ச்சித் திட்டம் வகுத்து, அரசியலுக்கு அப்பாற்பட்டு அதைச் செயல்படுத்த ஒருங்கிணைந்து முயற்சி செய்ய வேண்டும். ஹந்த்ரினிவா ஜன சரவந்தி, கலேறு-நகரி நதி நீர் திட்டங்களை விரைவில் முடிக்க வேண்டும். போலாவரம் திட்டத்தை நிறைவேற்றினால் ஆந்திராவின் தண்ணீர் பிரச்னை தீரும். இவ்வாறு என்று பேசினார்.

தொடர்ந்து நடந்த கூட்டத்தில் ஜன சைதன்யவேதிகா மாநில தலைவர் லட்சுமணன் பேசியதாவது: கடந்த 1956ம் ஆண்டு முதல் ஆந்திர அரசு பாசன திட்டங்களுக்காக பாடுபட்டு வருகிறது. அந்தந்த மாநில பட்ஜெட்டில் 10 சதவீதத்திற்க்கு மேல் ஒதுக்கி செலவு செய்து வரும் நிலையில், இன்றைய அரசு குறைவாகவே ஒதுக்கியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டில் வரவு செலவுத் திட்டங்களில் ஐந்து சதவீதம் மற்றும் மூன்று சதவீதம் மட்டுமே செலவிடப்பட்டது. பாசனத் திட்டங்களில் மாநில அரசின் விரக்தியின் விளைவாக ராயலசீமா வறட்சிப் பிரதேசமாக மாறியுள்ளது.

இன்றைய அரசு உற்பத்தித் துறைகளுக்குப் பதிலாக விளைச்சல் இல்லாத துறைகளுக்குச் செலவிடுகிறது. மாநில அரசு வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல் மக்களை பிச்சைக்காரர்களாக மாற்றுகிறது. ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு தரும் அமர் ராஜா தொழிற்சாலை, மாநில அரசின் பாகுபாடான போக்கால், தெலங்கானாவுக்கு இடம் பெயர்ந்துள்ளது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அன்னமையா திட்டத்திற்கு ₹10 கோடி செலவழிக்க முடியாததால், கடந்த 3 ஆண்டுகளாக புனரமைப்பு பணிகள் நடைபெறவில்லை என்பதை அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் திட்டத்தில் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு