பருத்திப்பட்டு அருகே ரூ.5 கோடியில் நவீன விளையாட்டு மைதானம்: அமைச்சர் சா.மு.நாசர் தகவல்

ஆவடி: ஆவடி அருகே நேற்றுமுன்தினம் மாலை டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிக்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் சா.மு.நாசர் பேசுகையில், பருத்திப்பட்டு பகுதியில் ரூ.5 கோடி மதிப்பில் நவீன விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என உறுதியளித்தார்.

ஆவடி அருகே திருமுல்லைவாயல் பகுதியில் டாக்டர் அம்பேத்கரின் 132வது பிறந்த நாளை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்ட அளவிலான ஒரு நாள் கால்பந்து போட்டி நேற்று காலை துவங்கியது. இப்போட்டியை ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார் துவக்கி வைத்தார். இதில் ஆவடி, பூந்தமல்லி, திருமுல்லைவாயல், புழல், பொன்னேரி, திருவள்ளூர் செவ்வாப்பேட்டை பகுதிகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட கால்பந்து அணியினர் பங்கேற்று விளையாடினர்.

இந்நிலையில், கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு நேற்று மாலை பரிசளிக்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்று, கால்பந்து போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த அணிக்கு ரூ.50 ஆயிரமும், 2வது இடம் பிடித்த அணிக்கு ரூ.40 ஆயிரமும், 3வது அணிக்கு ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டினார். இதில் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும் டேபிள் மின்விசிறி பரிசாக வழங்கப்பட்டது.பின்னர் அமைச்சர் சா.மு.நாசர் பேசுகையில், தமிழ்நாட்டில் அதிகளவிலான விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சட்டமன்றத் தொகுதியில் ரூ.5 கோடி மதிப்பில் நவீன விளையாட்டு ஸ்டேடியம் கட்டுவதற்கு கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, ஆவடி தொகுதிக்கு உட்பட்ட பருத்திப்பட்டு அருகே ரூ.5 கோடி மதிப்பில் நவீன விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என்று உறுதியளித்தார். இதில் ஆவடி மாநகராட்சி மேயர் ஜி.உதயகுமார், ஆவடி மாநகர பொறுப்பாளர் சண்.பிரகாஷ், கே.ராஜசேகர், ஆர்.சுதாகர், எஸ்.ராஜன், எம்.நவீன், ஏ.ஜெகன், எம்.சுமன், ராபின்சன், பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கடந்த 15 நாட்களில் பஞ்சாப் மாநில எல்லையில் 20 பாகிஸ்தான் டிரோன்கள் பறிமுதல்: எல்லைப் பாதுகாப்பு தகவல்

ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட வலிநிவாரணி மாத்திரைகள் பறிமுதல்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்கு இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் செல்லலாம்: மாவட்ட நிர்வாகம் தகவல்